ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை அணிக்கு அஞ்சலோ மெத்தியூஸ் மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பதவியும் நிரந்தரமா என்று கேட்டதற்கு, இனி எந்த மாற்றமும் தலைமைப் பதவியில் நேராது என தேர்வுக்குழுத் தலைவரும் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத் தலைவரும் உறுதியாக தெரிவித்துவிட்ட னர்.
இலங்கை கிரிக்கெட் அணி, கடந்த ஓர் ஆண்டாகவே தொடர் சரிவைச் சந்தித்துவருகிறது.
டெஸ்ட், ஒருநாள், இருபதுக்கு என அனைத்து வகைக் கிரிக்கெட் போட்டிகளிலும் தோல்விக்கு மேல் தோல்வி. விளைவு, தொடர்ச்சியாக அணித் தலைவரை மாற்றி, புதுப்புது உத்திகளைக் கையாண்டுவந்தது இலங்கைக் கிரிக்கெட் நிர்வாகம்.
ஆனால், எந்த உத்திக்கும் பலன் கிடைத்தபாடில்லை.அதே தோல்விகளைத் தான் சந்தித்தது. இந்நிலையில், எல்லாம் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்கிறது இலங்கை கிரிக்கெட் நிறுவனம்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், சிம்பாப்வே அணிக்கு எதிராக இலங்கை அணி, ஒருநாள் தொடரில் மண்ணைக் கௌவியவுடன், அணியின் தலைவராகவிருந்த அஞ்சலோ மெத்தியூஸ் பதவி விலகினார்.
அதன் பின்னர், உபுல் தரங்க அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இறுதியாக, திஸர பெரேரா தலைவராக்கப்பட்டார். ஆனால் இலங்கை, வெற்றியை மட்டும் எட்டியபாடில்லை.
இக்கட்டான இந்தச் சூழ்நிலையில்தான், புதிய பயிற்சியாளராக சந்திக்க ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு, அணியின் தலைவராக ஒருவர் நியமிக்கப்பட்டு, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிகள் வரை அவரே அந்தப் பதவியில் தொடர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் விட்ட இடத்திலேயே அனைத்தும் தொடங்கியுள்ளன. அதன்படி மீண்டும் அஞ்சலோ மெத்தியூஸையே அழைத்து வந்து தலைவர் பதவியில் அமர்த்தியுள்ளது இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம்.
இந்த அறிவித்தலை விடுக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று கிரிக்கெட் நிறுவனத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த புதிய இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், மீண்டும் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தோடு நான் அன்று பதவியை துறக்கவில்லை.
இளம் வீரர் ஒருவருக்கு அணியைக் கட்டியெழுப்புவதற்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு விலகுவதுதான் சரியென்று அன்று நான் நினைத்தேன்.
ஆனால் பயிற்சியாளரும், இலங்கைக் கிரிக்கெட் நிர்வாகமும் கேட்டுக்கொண்டதற்கிணங்க மீண்டும் தலைவர் பொறுப்பை இப்போது ஏற்றுள்ளேன்.
நான் கடந்த பத்து வருடங்களாக விளையாடுகின்றேன். இந்த கிரிக்கெட் எனக்கு நிறைய தந்திருக்கிறது.
இக்கட்டான இந்த நிலையில் நான் இலங்கை கிரிக்கெட்டுக்கு சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை உதறித் தள்ளினால் துரோகம் செய்தவனாகிவிடுவேன். அதனால்தான் தலைவர் பொறுப்பை மீண்டும் ஏற்றேன் என்றார்.
அஞ்சலோ மெத்தியூஸாவது நீண்டகாலத் தலைவராக நீடிப்பாரா என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, தேர்வுக்குழுத் தலைவர் கிரஹம் லெப்ரோய், இனி எந்தவித தலைவர் மாற்றமும் நிகழாது. அது நிச்சயம் என்றார்.