தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், கேப்டன் விராட் கோலி 5 ரன்களில் அவுட் ஆனதால், அவரின் 63 வயது ரசிகர் தீக்குளித்து தற்கொலைசெய்துகொண்டார்.
மத்தியப்பிரதேச மாநிலம் ரத்லம் அம்பேத்கர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் பாபுலால் பாரியா, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், விராட் கோலியின் தீவிர ரசிகர். தற்போது, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில், விராட் கோலி 5 ரன்களில் அவுட் ஆனார். இந்திய அணி, இறுதியில் தோல்வியும் கண்டது. போட்டி நிறைவடைந்ததிலிருந்து சோகமாக இருந்த பாபுலால் பாரியா, நேற்று தீக்குளித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
கேப்டவுனில் நடந்த இந்தப் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி இரண்டு இன்னிங்ஸிலும் முறையே 286 மற்றும் 130 ரன்களை எடுத்தது. இந்திய அணி 209, 135 ரன்களை எடுத்து தோல்வி கண்டது. டேல் ஸ்டெயின் இல்லாத நிலையில், பிலாண்டர் பந்துவீச்சில் இந்திய அணி சுருண்டது. இரண்டாவது இன்னிங்ஸில் பிலாண்டர் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டெஸ்ட் போட்டியில் பிலாண்டரின் சிறந்த பந்துவீச்சு இது.