யாழ்ப்பாண மாவட்டத்தில் அனுமதிப்பத்தரமின்றி முன்னெடுக்கப்பட்ட கேபிள் இணைப்புகள் இன்று அதிகாலை முதல் அகற்றப்படுகின்றன.
கொழும்பிலிருந்து வருகை தந்த தொலைத்தொடர்பு ஆணைக்குழு அதிகாரிகளாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
அரசின் அனுமதிப் பத்திரமின்றி தொலைக்காட்சி அலைவரிசைகளின் கேபிள் இணைப்பை வழங்க முடியாது என தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
சட்டவிரோத கேபிள்கள் அனைத்தையும் டிசெம்பர் 31ஆம் திகதிக்குள் அகற்றுமாறும் அது கேட்டுக்கொண்டது. எனினும் அவை அகற்றப்படவில்லை.
இந்த நிலையில் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் வருகை தந்தனர். ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று சட்டவிரோத கேபிள் இணைப்புகளை அவர்கள் அறுத்து அகற்றினர்.
மேலும் சட்டவிரோதமாக கேபிள் இணைப்பை வழங்கியவர்களின் சேவை நிலையத்தை முற்றுகையிட்டு, அங்குள்ள தொழிநுட்ப சாதனங்களை அரசுடமையாக்கும் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் அஸ்க் (,ASK) மீடியா மட்டுமே அனுமதிபெற்ற கேபிள் சேவை வழங்குனர் என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.