யாழ்ப்பாணத்தில் தொலைக் காட்சி ஒளிபரப்பு கலையகத்துக்குள் கத்தி, பொல்லுடன் அத்துமீறி நுழைந்து அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளரைத் தாக்கிய வயோதிபரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைக்காட்சி ஒளிபரப்புக் கலையகத்துக்கு நேற்று மாலை வயோதிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார். அவரது கைகளில் வெட்டுக்கத்தி மற்றும் பொல்லு என்பன இருந்தன. கலையகத்தின் வரவேற்பு அறைக்குள் நுழைந்த அவர் அங்கு பணியிலிருந்த செய்திப் பணிப்பாளர் தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வே.தயாநிதியை தாக்கினார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பித்துச் சென்றார். அவரைப் பொலிஸார் கைது செய்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றன.
“முதியவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்றே வாக்குமூலம் வழங்கினார். தனது மூளைக்குள் இரும்புத் தகட்டைச் சொருகி டான் நிறுவனத்தினர் தன்னிடமுள்ளவற்றை பெறுகின்றனர். என்னிடம் கைபேசியில்லை, எனது மூளைக்குள் மெமரிக்காட் உள்ளது. அது தேவையான போது கைபேசியாகப்பயன்படுத்துவேன்” என்று மனநிலை பாதிக்கப்பட்டவராக அவர் விசாரணையின் போது நடந்து கொண்டார்.
20 வருடங்களுக்கு மேலாக அவர் ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பியுள்ளார். தற்போது யாழ்ப்பாணம் முதன்மை வீதியுள்ள அந்தியகாலச் சேவை நிறுவனத்தில் பணியாற்றுகிறார்” என்று பொலிஸார் கூறினர்.