உமா ஓயா செயற்திட்டத்தை துரிதப்படுத்தி அதன் அநுகூலங்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழிங்கினார்.
(09) பிற்பகல் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அவ்வமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கினார்.
உமா ஓயா செயற்திட்டத்தின் செயற்பாடுகள் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் நிதி நிலைமைகள் தொடர்பாக இதன்போது ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடினார்.
மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் அமைச்சின் 2017 ஆம் வருடத்திற்குரிய முன்னேற்றம் மற்றும் 2018 ஆண்டின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அமைச்சின் கீழ் செயற்படும் நிறுவனங்களின் முன்னேற்றம் வெளிநாட்டு நிதியத்தின கீழ் செயற்படுத்தப்படும் மகாவலி செயற்திட்டங்கள் , சுற்றாடல் செயற்திட்டங்கள் மற்றும் அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் வருமானம் ஈட்டும் நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பாகவும் மீளாய்வு செய்யப்பட்டது.
தேசிய சுற்றாடல் கொள்கையை உருவாக்கும் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
எதிர்காலத்தில் உரிய காலத்தில் மழை பெறப்படாமையினால் நாட்டில் ஏற்படக்கூடிய வரட்சி நிலையை இனங்கண்டு அதனை எதிர்கொள்ளக்கூடியவாறு விவசாய மற்றும் உணவு உற்பத்தி துறைகளில் திட்டமிடுவதற்கு நிபுணர்களின் குழுவொன்றினை நியமிக்கவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதியமைச்சர் அநுராத ஜனரத்ன, அமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக்க, மகாவலி பணிப்பாளர் கோதாபய ஜயரத்ன உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.