இலங்கையிலிருந்து வெளியேறிச் சென்ற ஈழத்தமிழர்கள் தமிழகத்திலுள்ள மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை உட்பட சில மாவட்டங்களில் அகதிகளாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இப்படித் தங்கியுள்ள ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசு உணவு, உடை, படிபணம் உட்பட சில சலுகைகளையும் செய்துவருகிறது. அப்படியிருந்தும்கூட கடந்த சில மாதங்களாகவே ஈழத்தமிழர்கள் பலர் இலங்கையிலுள்ள சொந்த ஊர்களுக்குத் திரும்பியும் வருகிறார்கள்.
ஆனால், பெரும்பாலான அகதிகளோ இன்னும் அந்தந்த பகுதிகளிலுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அடியனூத்து, தோட்டனூத்து, பழனி அருகே உள்ள விருப்பாச்சி, சிவகரிபட்டி, புளியம்பட்டி போன்ற அகதி முகாம்களை ஆய்வுசெய்ய புதுடில்லியிலிருந்து மத்திய உள்துறை செயலாளர்களான பரிடா.சட்டீஸ்குமார் குழு சென்றது.
இப்படி ஆய்வுசெய்யச் சென்ற குழுவிடம் அங்குள்ள ஈழத்தமிழர்கள், “அகதி முகாம்களில் இருக்கும் முதியவர்களுக்கு உதவித்தொகை வழங்கவேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள்.
“நாங்கள் அகதிகள் என்பதால் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி படிக்க எங்கள் பிள்ளைகள் போகமுடியவில்லை. அதுபோல் நாங்கள் தொடர்ந்து இங்கேயே இருக்க விரும்புகிறோம். அதனால், எங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கவேண்டும்” என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்தனர்.
இதையெல்லாம் பொறுமையாகக் கேட்ட இந்தக் குழுவினர், “உங்கள் கோரிக்கையை நிவர்த்திசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச்சென்றனர்.
இந்த ஆய்வுக் குழுவோடு மாவட்ட பிற்படுத்தப்பட்ட நலத்துறை அலுவலர் இந்திராவள்ளி, பழனி, தாசில்தார் ராஜேந்திரன் உட்பட சில அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.