பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான்கான் (65), தெஹ்ரிப்-இ-இன்சாப் கட்சியின் தலைவராக உள்ளார்.
இவர் கடந்த 1ம் தேதி, 40 வயதாகும் ஆன்மீக ஆலோசகரான புஷ்ரா மனேகா என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்மீக ஆலோசனைக்காக இம்ரான்-மனேகா இடையே 2 ஆண்டுக்கு முன் ஏற்பட்ட நட்பு, பின்பு காதலாக மலர்ந்துள்ளது.
மேனகா ஏற்கனவே திருமணமாகி கணவரை விவகாரத்து செய்தவர். அவரது கணவர் அரசு ஊழியர் ஆவார். அவருக்கு குழந்தைகளும் உள்ளனர்.
இதற்கிடையே, புத்தாண்டு தினத்தில் இம்ரான்கான் – மனேகா ரகசிய திருமணத்தை கட்சியின் ஒருங்கிணைப்பு உறுப்பினர் முப்தி சயீத் நடத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இது இம்ரான்கானின் 3வது திருமணமாகும்.
1995ல் ஜெமிமா கானை மணந்த இம்ரான்கான், 9 ஆண்டு மண வாழ்க்கைக்கு பிறகு 2004ல் விவாகரத்து செய்தார். பின்னர், 2014 நவம்பரில் டிவி தொகுப்பாளர் ரேஹமை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் 2015, ஜனவரி 8ம் தேதியே உறுதிபடுத்தப்பட்டது. ஆனால், 2வது திருமணம் வெறும் 10 மாதங்களே நீடித்தது. அதுவும் விவாகரத்தில் முடிந்தது. தற்போது 3வது முறையாக இம்ரான் ரகசிய திருமணம் செய்திருப்பதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.
இது குறித்து அவரது செய்தித் தொடர்பாளர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், ‘‘வெறும் ஊகத்தின் அடிப்படையில் தவறான கட்டுக்கதையை வெளியிட்டிருப்பது வருத்தமளிக்கிறது. இது, பொதுவாழ்க்கையில் இல்லாத அந்த பெண்ணின் மீதும் அவரது குழந்தைகள் மீதும் பெரிய அழுத்தத்தை உருவாக்கி விடும்.
மனேகாவை திருமணம் செய்து கொள்ள இம்ரான்கான் விருப்பம் மட்டுமே தெரிவித்துள்ளார்’’ என கூறி உள்ளார். இந்த விவகாரம், பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.