நட்சத்திர விழாவில் கமல், ரஜினியிடம் தனித்தனியே நடிகர் விவேக் கேள்விகளை கேட்டார்.
அதற்கு அவர்கள் பதில் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விவரம்: விவேக்: வயது ஆக, ஆக மத, ஆன்மிக உணர்வு எட்டிப் பார்க்க வாய்ப்பு இருக்கிறதா?
கமல்: நான் யானையாக இருந்தாலும் மதம் பிடிக்காத யானையாகவே இருப்பேன். வயதாக ஆக, அறிவு வளரும். குறையாது. அது பகுத்தறிவுக்கும் பொருந்தும்.
விவேக்: உங்கள் டிவிட்டர் தமிழ், தூய தமிழாக இருப்பதாக சில சமயம் சிலர் சொல்கிறார்கள்?
கமல்: சில விஷயங்களை வேகமாக புரியும்படி சொல்லும்போது கெட்ட வார்த்தையாக அது தெரியலாம். அப்போது இதுபோல் தூய தமிழ் பயன்படுத்துவது சவுகரியமானது.
விவேக்: உங்களுக்கு பிடித்த வசனம்?
கமல்: பராசக்தி வசனங்களை பேசி பழகியவன் நான். எனது வசனத்தை நடிகர் திலகம் தேவர் மகனில் பேசியது என் பாக்கியம். விதை… நான் போட்டது என அவர் பேசும் வசனம் மிகவும் பிடிக்கும்.
விவேக்: கட்டை விரலை கூட இறக்குவதற்கு யோசித்தவர்களுக்கு இடையே கழுத்தளவு இறங்கி களத்தில் குதித்தது ஏன்?
கமல்: கழுத்தளவு வரை கெட்டவை, அசுத்தம் நிறைந்துவிட்டதால். நானும் எனது நண்பர் ரஜினியும் சமூக பார்வையோடு இறங்கியுள்ளோம்.
ரஜினியிடம் விவேக் எடுத்த பேட்டி:
விவேக்: உங்க குறைந்தபட்ச, அதிகபட்ச ஆசை?
ரஜினி: மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ்ந்தா போதும்னு நினைச்சேன். அது குறைந்தபட்ச ஆசை. என்னை வாழவைத்த தமிழ் மக்களுக்கு நல்ல வாழ்க்கை தரணும்னு நினைக்கிறேன். இது அதிகபட்ச ஆசை.
விவேக்: பொதுவாழ்க்கைக்கு வருபவர்களுக்கு குடும்பம் ஒரு சுமையா?
ரஜினி: அது அவரவர் குடும்ப சூழலை பொருத்து இருக்கு.
விவேக்: ஜோசியம் நம்பிக்கை பற்றி?
ரஜினி: அதை யார் சொல்றாங்கங்கிறது பொருத்துதான் இருக்கு. அதே சமயம், நமக்கு ஏதாவது கிடைக்க கூடாதுன்னு இருந்துச்சுன்னா அது கிடைக்காது. கிடைக்கணும்னு ஆண்டவன் தீர்மானிச்சிட்டா கிடைச்சே தீரும்.
விவேக்: 1996ல் வாய்ப்பு வந்தும் அரசியலுக்கு வராதது பற்றி வருத்தம் இருக்கா?
ரஜினி: ஒரு செகண்ட் கூட கிடையாது.
விவேக்: வாழ்வின் நிறைவில் நீங்க என்னவாக நினைவு கூறப்படணும்?
ரஜினி: நடிகனா வந்தான், நடிகனா போயிட்டான்னு வேணாம். மக்களுக்கு நல்லது பண்ணனும். மேடைக்கு வந்த நடிகை லதா ரஜினியிடம் கேள்வி ேகட்டார். ‘உங்க முதல் காதல் யார்?’ என கேட்டதும் ரஜினி சிரித்தபடியே, ‘பள்ளியில் படிக்கும்போது ஒரு பொண்ணை விரும்பினேன். அது தோல்வியில் முடிஞ்சுது’ என்றார். ‘அவங்க பெயர் என்ன’ என லதா கேட்க, ‘ெபயர் வேண்டாம்’ என்றார் ரஜினி.