ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரை கடந்த 79 ஆண்டாக இல்லாத அதிகபட்ச வெயில் சுட்டெரிக்கிறது. சிட்னியின் மேற்குப்பகுதியில் மக்கள் 47.3 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் அவதிப்பட்டனர். ரிச்மாண்டில் 46.3 டிகிரியும், கேம்ப்பல்டவுனில் 44.6 டிகிரியும் சிட்னி வானிலை மைய குன்றில் 43.4 டிகிரியும் வெயில் இருந்தது. 79 ஆண்டுகளுக்கு முன் 1939 ல் சிட்னியில் 47.8 டிகிரி வெயில் நிலவியது.
இந்த வெயில் கொடுமையைத் தாங்க முடியாத மக்கள் பெருமளவில் சிட்னி கடற்கரையில் குவிந்தனர். பெண்கள் பெரிய குடையுடன் பிக்னி உடையில் காணப்பட்டனர். இந்த வெயில் மேலும் தொடரும் என கூறப்படுகிறது.
டென்னிஸ் வீராங்கனை பாதிப்பு
சிட்னியில் நடைபெற்று வரும் சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த கிறிஸ்டினா, வெயில் கொடுமை தாங்காமல் ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார்.
மக்களை வெயில் கொடுமையில் இருந்து காப்பாற்ற தொண்டு நிறுவனங்கள் குடிநீர் வழங்கின. வெயிலால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வெயில் கொடுமைக்கு விலங்குகளும் தப்பவில்லை. சிட்னியில் உள்ள டராங்கோ மிருககாட்சி சாலையில் நீர்யானைகளுக்கு ஐஸ்கட்டிகளில் பொதியப்பட்ட கேரட்களும், நீர் நாய்களுக்கு ஐஸ் கட்டிகளில் பொதியப்பட்ட இறால் மீன்களும் வழங்கப்பட்டன.