ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற நிலம் கையகப்படுத்தும் பணி 4 மாதத்தில் முடியும் என்று கலெக்டர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
நினைவு இல்லம்
முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நல குறைவால் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார். அவர் வசித்து வந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. அரசு அறிவிப்புக்கு பின்னர் முதல் நடவடிக்கையாக கடந்த மாதம் 30-ந் தேதி கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் வேதா நிலையத்தை ஆய்வு செய்தனர்.
முதல்கட்ட ஆய்வு
அப்போது, வேதா நிலையத்தின் மொத்த பரப்பளவு எவ்வளவு? அதில் வீடு மட்டும் எத்தனை சதுர அடி பரப்பளவில் உள்ளது? கட்டிட ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், நில அளவைத்துறை, போலீஸ் அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆய்வுக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அன்புச்செல்வன், வேதா நிலையத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு, முதல் கட்டமாக ஆய்வு நடைபெற்றது. வேதா நிலையம் அமைந்துள்ள நிலப்பகுதி, அதன் விரிவாக்கம், கட்டிட பரப்பளவு போன்றவை சுமுகமாக ஆய்வு செய்து முடிக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.
2-வது முறையாக ஆய்வு
இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையில் அதிகாரிகள் நேற்று 2-வது முறையாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் அன்புச்செல்வன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தின் நிலத்தை மதிப்பீடும் செய்யும் பணிகளை தொடர்ந்து, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் சொல்லி இருக்கிற அனைத்து வழிமுறைகளையும் தவறாது, விடுபடாது செய்வதற்கு நாங்கள் திட்டம் வகுத்து இருக்கிறோம்.
அந்த திட்டத்தின்படி, 4 மாதத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிக்கப்படும். நிலம் கையகப்படுத்தி அரசிடம் ஒப்படைக்கப்படும். பின்னர் எந்த தேதியில் நினைவு இல்லமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடவேண்டும் என்பதை அரசு தான் முடிவு செய்யும்.
2 அறைகள் திறப்பு எப்போது?
வருமான வரித்துறையால் பூட்டி சீல் வைக்கப்பட்ட 2 அறைகள் திறக்கப்படவில்லை. அந்த அறைகள் அப்படியே வைக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் சட்ட நடைமுறைக்காக காத்திருக்கிறார்கள். அந்த 2 அறைகளையும் எங்களுடைய ஆய்வுக்கு உட்படுத்துவதற்கு ஒத்துழைப்பு தருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தேதி வரையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசு என்று யாரும் இல்லை. இந்த ஆய்வு பணிகள் முடிந்தவுடன் பொதுமக்களுக்கு நோட்டீசு அனுப்பப்படும். அப்போது யாரேனும் உரிமை கோரினால் அதற்கான ஆட்சேபனைகளையும், கருத்துகளையும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து ஜெயலலிதா வீட்டில் பாதாள அறை இருக்கிறதா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அன்புச்செல்வன் பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்றார்.