யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இராணுவத்தின் வசமுள்ள நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை மீள கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியிடம் நீதிபதி இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியை யாழ்.இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதன்போதே நீதிபதி இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பருத்தித்துறையில் நீதிமன்றுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணியில் பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்திருந்தது. அக்காணியினை போர்க்காலத்தில் தம் வசப்படுத்திய இராணுவத்தினர் அங்கு 551ஆவது படைத்தளத்தை அமைத்துக்கொண்டனர்.
இந்நிலையில், குறித்த காணியினை மீள கையளித்தால் அங்கு மேல் நீதிமன்றத்தினை அமைக்க முடியும் என நீதிபதி இராணுவ தளபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்த இராணுவ தளபதி தன்னால் முடிந்தளவு விரைந்து அக்காணியினை மீள கையளிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
குறித்த சந்திப்பில் ராணுவ தளபதியுடன், யாழ்.நகர தளபதி மற்றும் இராணுவ சட்ட ஆலோசகரும் கலந்துகொண்டனர்.