கடந்த ஆண்டு நவம்பர் 30-ந் தேதி வீசிய ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டமும், கேரளாவின் கடலோர பகுதிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்த கேரள மாநில மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் புயலில் சிக்கி மாயமானார்கள்.
அவர்களில் பலர் உயிருடனும், பிணமாகவும் மீட்கப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கான மீனவர்களின் கதி என்ன ஆனது? என தெரியவில்லை.
நம்பிக்கையுடன் காத்திருப்பு
புயல் பாதிப்பு ஏற்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் மாயமான மீனவர்கள் நிச்சயம் கரை திரும்பி வருவார்கள் என அவர்களுடைய குடும்பத்தினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். அந்த நம்பிக்கை தற்போது வீண்போகவில்லை.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்த மீனவர் புஷ்பராஜன் (வயது 51) கடலுக்கு மீன்பிடிக்க சென்று புயலில் சிக்கி மாயமானார். இதனால் அவருடைய குடும்பத்தினர் பரிதவிப்போடு, புஷ்பராஜன் வரவை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய வீட்டுக்கு புஷ்பராஜன் போனில் பேசினார். அந்த போனை அவருடைய மகள் பிரியா எடுத்து பேசினார்.
குமரி மீனவர்கள்
தந்தை உயிருடன் இருப்பதை அறிந்து பிரியா மகிழ்ச்சி அடைந்தார். அப்போது, தான் அந்தமான் தீவு பகுதியில் கரை சேர்ந்து இருப்பதாகவும், தன்னுடன் குமரி மாவட்டம் வள்ளவிளை கிராமத்தை சேர்ந்த 6 மீனவர்கள் உள்ளதாகவும் புஷ்பராஜன் கூறினார். அதற்குள் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் அந்த போன் இணைப்பு கிடைக்கவில்லை.
இருந்தாலும் புஷ்பராஜனின் குரலை கேட்டதால் இன்ப அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் உடனே அவரையும், குமரி மீனவர்கள் 6 பேரையும் மீட்க உதவும்படி விழிஞ்ஞம் பங்குத்தந்தையிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதுபற்றி கேரள அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மீட்க நடவடிக்கை
புஷ்பராஜன் வீட்டுக்கு எங்கிருந்து போன் அழைப்பு வந்தது? என்பது குறித்து ஆய்வு செய்ய போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. புஷ்பராஜனையும், குமரி மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கேரள அரசு தெரிவித்தது.
இதற்கிடையே வள்ளவிளையை சேர்ந்த 6 மீனவர்கள் அந்தமானில் கரை சேர்ந்து இருப்பது குறித்து அந்த ஊரை சேர்ந்தவர்கள் யாருக்காவது தகவல் வந்துள்ளதா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.
மீனவர் உடல் ஒப்படைப்பு
ஒகி புயலில் சிக்கி கடற்கரையில் ஒதுங்கிய மீனவர்களின் உடல்களை டி.என்.ஏ. எனப்படும் மரபணு பரிசோதனை நடத்தி உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடையாளம் காண முடியாத உடல்கள் கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி அரசு ஆஸ்பத்திரிகளில் வைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறையை சேர்ந்த மீனவர் வில்பிரைட் (55) உடல் நேற்று முன்தினம் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டது. இந்த தகவல் உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று சென்று ஆவணங்களை சமர்ப்பித்து வில்பிரைட் உடலை பெற்றுக்கொண்டனர்.