நைஜீரியாவில் தேவாலயத்தில் புத்தாண்டு பிரார்த்தனையில் பங்கேற்று திரும்பியவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நைஜீரியாவின் எண்ணெய் வளம் மிக்க பகுதியான ரிவர்ஸ் ஸ்டேட் பகுதியிலுள்ள ஒமாகு நகரில் புத்தாண்டை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கஷ்தங்கள் தீர பிராத்தனை மேற்கொண்டனர். நள்ளிரவு 12.30 மணியளவில் மர்ம நபர் ஒருவன் திடீரென பிராத்தனை முடித்துவிட்டு வெளியே வந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளான்.
இந்த திடீர் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர்.
பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். நைஜீரியா பல்வேறு ஆயுதக் குழுக்களின் புகலிடமாக இருப்பதால் தொடர்ந்து வன்முறை தாக்குதல்கள் நடைபெறுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.