சென்னை அரசு மருத்துவமனையில் அரியலூர் கலெக்டர் ஆட்சியர் லட்சுமிப்பிரியா அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பெரும்பாலனோர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் தனியார் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசியல்வாதிகளும் அரசு உயர் அதிகாரிகளும் அரசு மருத்துவமனைக்கு சென்றார்கள் என்றால் அது தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் செய்தியாகிவிடுகிறது.
அரசு மருத்துமனை என்பது எழை எளிய மக்கள் சிகிச்சைப் பெறும் இடம் என்ற கருத்துதான் பரவலாக உள்ளது. இந்நிலையில் அரியலூர் ஆட்சியர் லட்சுமிப்பிரியா அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அரியலூர் மாவட்ட ஆட்சியராக லட்சுமிபிரியா கடந்த ஆண்டு ஜுலை மாதம் பொறுப்பேற்றார். இந்நிலையில் அண்மையில் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.
வலியால் துடித்த அவர், அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆட்சியர் லட்சுமிப்பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு குடல் வால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
இதையடுத்து அரசு மருத்துவமனையிலேயே ஆப்ரேஷன் செய்யுமாறு கூறினார் கலெக்டர் லட்சுமிப்பிரியா. இதைத்தொடர்ந்து நேற்றிரவு அவருக்கு அரசு மருத்துவமனையில் நேற்றிரவு குடல்வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அரியலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள அவரை அரசு அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். ஆட்சியர் லட்சுமிப்பிரியா தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியராக உள்ளவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருப்பது மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. இதேபோல் அரசியல்வாதிகளும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றால் அரசு மருத்துவமனைகளின் தரம் உயரும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.