கனடாவில் காதலி கொடுத்த பரிசுப் பொருளை, 47 வருடமாக அவரது காதலன் பிரிக்காமல் இருப்பது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவைச் சேர்ந்தவர் அட்ரியன் பியர்ஸ். இவர் தனக்கு வந்த பரிசுப் பொருள் ஒன்றை 47 ஆண்டுகள் பிரிக்காமல் வைத்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், நான் 1970-ஆம் ஆண்டு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன், அப்போது தனக்கு 17 வயது இருக்கும். நான் விக்கி என்ற பெண்ணை காதலித்து வந்த காலம் அது.
அந்த சமயத்தில் திடீரென்று விக்கி வந்து ஒரு பரிசுப் பொருளைக் கொடுத்து உறவை முறித்துக் கொள்ளலாம் என்று கூறி சென்றுவிட்டார்.
இதனால் மனம் உடைந்துபோன நான் கோபத்தில் பரிசுப் பெட்டியைத் தூக்கி வீசிவிட்டேன், அப்போதைய காலக்கட்டம் கிறிஸ்துமஸ் தினம் என்பதால், அந்த பரிசுப் பொருள் கிறிஸ்துமஸ் மரத்துக்கு அடியில் போய் விழுந்தது.
அந்த ஆண்டு கிறிஸ்துமஸ் முடிந்தவுடன் எல்லாப் பரிசுகளையும் வீட்டில் உள்ளவர்கள் பிரித்துப் பார்த்தார்கள். கடைசியில் இந்தப் பரிசைப் பிரிக்க முயன்றபோது, அதைப் பிரிக்க வேண்டாம் என்று நான் கூறிவிட்டேன்.
என் முதல் காதல் முறிந்தபோது கொடுத்த இந்தப் பரிசைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குக் கோபமாக இருக்கும். சில ஆண்டுகளுக்குப் பிறகு என் குடும்பத்தினர் பிரிக்கலாம் என்று கூறினார்கள்.
நான் இதை வாழ்நாள் முழுவதும் பிரிக்கப் போவதில்லை என்று கூறிவிட்டேன். இதையடுத்து விக்கியின் தங்கை என்னைத் தொடர்புகொண்டு, விக்கி என்னைப் பார்க்க விரும்புவதாக கூறினார்.
அப்போது இருவரும் சந்தித்துக் கொண்டோமே தவிர, மீண்டும் காதலிக்கும் எண்ணம் தோன்றவில்லை. இனி சந்திக்க வேண்டாம் என்று பிரிந்து சென்றோம்.
இதைத் தொடர்ந்து எனக்கு திருமணம் ஆனது, குழந்தைகள் பிறந்தனர். ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதும் இதைப் பிரிக்கலாமா என்று மனைவியும் குழந்தைகளும் கேட்பார்கள். நான் வேண்டாம் என்று மறுத்துவிடுவேன்.
ஏனெனில் என்றாவது ஒருநாள் விக்கி வருவார், அப்போது இருவரும் சேர்ந்து பிரிக்கலாம் என்ற எண்ணம்தான். அதோடு பிரித்துவிட்டால், அதில் உள்ள சுவாரசியம் போய்விடும்.
இந்தக் கிறிஸ்துமஸின்போது விக்கியைத் தொடர்புகொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அதனால் 50-வது ஆண்டில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் போகிறேன்.
இந்தப் பரிசுப் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்பதைச் சரியாகச் சொல்பவர்களுக்குப் பரிசு கொடுக்கப் போகிறேன். இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் வருமானத்தை அறக்கட்டளைக்கு வழங்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.