எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் அரசாங்கத்தை மாற்றியமைக்கும் ஒரு தேர்தல் அல்ல. 2020 வரை இந்த அரசாங்கத்தில் அமைச்சராக நானே இருப்பேன் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
பெப்ரவரி மாதம் 10ம் திகதி இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது பிரச்சார கூட்டம் ஒன்று 31.12.2017 அன்று காலை 11 மணியளவில் அட்டன் டீ.கே.டபிள்யூ கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
2015ம் ஆண்டு ஒட்டுமொத்த மலையக மக்களும் எவ்வாறு எமக்கு வாக்களித்தார்களோ அதேபோன்று உள்ளுராட்சி மன்ற தேர்தலிலும் யானை சின்னத்திற்கு அணைவரும் வாக்களிக்க வேண்டும்.
பெப்ரவரி மாதம் 11ம் திகதி தெரியும் மலையக மக்கள் யாருடைய பக்கம் என்று. நாங்கள் சமூகத்தில் இறங்கி வேலை செய்வதனால் இன்று வீடு வீடாக லயன்கள் தோறும் சென்று சிலர் வாக்குகள் கேட்கின்றார்கள்.
நாங்கள் இவ்வாறு சமூகத்தில் செயல்படாவிட்டால் அரசரை போல் இருந்துருப்பார்கள். இந்திய அரசாங்கத்தின் ஊடாக கிடைக்க பெற்றிருக்கும் 4000 வீடுகள் நாங்கள் தான் கொண்டு வந்தோம் என பொய் சொல்லி சிலர் திரிகின்றார்கள்.
ஆனால் இந்த 4000 வீடுகளை இலங்கைக்கு கொண்டு வந்து அதற்கான அமைச்சரவை அந்தஸ்த்தை பெற்று வீடுகளை அமைத்து வருகின்றோம். பொகவந்தலாவ, அக்கரப்பத்தனை, பூண்டுலோயா ஆகிய பகுதிகளில் இந்த வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றது.
2018ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளது. சம்பள பிரச்சினையை நாம் குழப்பியடித்தோம். 4000 வீடுகளை நாமே கொண்டு வந்தோம் என்றெல்லாம் பொய் கூறி வாக்கு கேட்கும் நிலைமைக்கு சிலர் தள்ளப்பட்டுள்ளனர்.
இவை அனைத்தும் பொய் என அவர்களுடைய பேச்சுகளிலிருந்து மக்களுக்கு தெரியவந்துள்ளது. ஆகையால் இதை பற்றிக் கவலைப்பட வேண்டாம் என நான் தெரிவிக்கின்றேன்.
நல்ல வீடு வேண்டும் என்றால் யானை சின்னத்தை பலப்படுத்த வேண்டும். அப்போது தான் வீடு உள்ளிட்ட ஏனைய அபிவிருத்தி வசதிகளை நாம் பெற்றுக் கொள்ள முடியும். எதிர்கட்சியினருக்கு வாக்களித்து இன்னும் மூன்று வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டாம்.
2020ம் ஆண்டு வரை நானே அமைச்சர் என உறுதியாக தெரிவித்த அவர், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் வீடமைப்பு பொறுப்பை இந்த அரசாங்கம் எனக்கே வழங்கியுள்ளது என உருக்கமாக தெரிவித்தார்.