ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரான பின் சோனியா காந்தி தெற்கு கோவாவில் உள்ள ஒரு ஓட்டலில் விடுமுறையை கழித்து வருகிறார்.
தற்போது ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். தனக்கு ஓய்வு தேவை எனவும் வேறு பொறுப்புக்கள் தேவை இல்லை எனவும் முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ராகுல் காந்தியின் தாயுமான சோனியா காந்தி அறிவித்திருந்தார். அதன் படி அவர் டிசம்பர் 26ஆம் தேதி அன்று தனது விடுமுறையைக் கழிக்க கோவா சென்றுள்ளார். அவர் ஏற்கனவே மூன்று முறைக்கு மேல் கோவா வந்துள்ளார்.
தற்போது அவர் தெற்கு கோவாவில் உள்ள லீலா ஓட்டல் என்னும் விடுதியில் தங்கி உள்ளார். அந்த விடுதியில் தங்கி இருக்கும் மற்றவர்களுடன் சிரித்துப் பேசுகிறார். தன்னுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள விரும்புவோருக்கு எந்த தடையும் விதிப்பதில்லை. மற்ற விருந்தினர்கள் போலவே இவரும் உணவு விடுதிக்குச் சென்று காத்திருந்து உணவு சாப்பிட்டு வருகிறார். தனக்கு மிகவும் பிடித்த உணவு மசாலா தோசை என கூறும் சோனியா அதை காத்திருந்து விரும்பி உண்டு மகிழ்கிறார்.
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுக் கொண்ட அன்றே சோனியா தனது கோவா பயணத்தை முடிவு செய்துள்ளார். ராகுல் பதவி ஏற்ற உடனேயே தனது மகள் பிரியங்காவுடன் டில்லியில் உள்ள கான் மார்க்கெட் பகுதிக்கு சென்ற சோனியா வாழ்த்து அட்டைகள் போன்றவற்றை வாங்கினார். மருத்துவர்கள் அவர் உடல்நிலைக்கு டில்லி சரிப்பட்டு வராது எனக் கூறியதன் பேரில் அவர் கோவாவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் சோனியா முழுக்க முழுக்க இந்த விடுமுறையை ரசித்து வருகிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சைக்கிள் ஓட்டும் அவர் யோகா செய்வதிலும், புத்தகங்கள் படிப்பதிலும் நேரம் செலவிட்டு வருகிறார். சோனியா தற்போது தொலைக்காட்சிச் செய்திகளை பார்ப்பதோ செய்தித் தாள்களை படிப்பதோ இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.