பரபரப்பு காலை நேரத்தில் அது நிறையவே இருக்கும். பெருநகரங்களில், அதுவும் இந்த உள்ளூர் ரயில், ஷேர் ஆட்டோ அல்லது பஸ் ஏறிப் போகிறவர்கள் பாடு எப்போதும் திண்டாட்டம்தான். டிராஃபிக் அப்படி! ஒரு பத்து நிமிடம் தாமதமாக சென்று பஞ்ச் வைத்தால்கூட, சம்பளத்தில் பிடிக்கும் நிறுவனங்கள் இங்கு உண்டு. இந்தியாவில் பல நகரங்களில் மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, 10 ரூபாய் அதிகம் என்றாலும் பரவாயில்லை என அதைத் தேர்ந்தெடுத்தவர்கள் ஏராளம். இப்போது அதன் அடுத்த கட்டமாக, விரைவில் வரவிருக்கிறது பாட் டாக்ஸி (Pod Taxi). தனிப்பட்ட விரைவான போக்குவரத்து (Personal rapid transit) என்று அழைக்கப்படும் இது, விரைவில் நம் இந்தியத் தலைநகரான டெல்லியில் வரவிருக்கிறது.
பாட் டாக்ஸி
சில வருடங்களுக்கு முன்பிருந்தே பரவலாக பேசப்பட்ட இந்தத் திட்டம், நடைமுறை சிக்கல்கள், பட்ஜெட் என்று பல காரணங்களுக்காகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நித்தின் கட்கரி அவர்களின் கனவு திட்டமான இதற்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. உயர்மட்டக் குழுவின் பரிந்துரைப்படி, 4,000 கோடி செலவில் இதற்கான பணிகள் ஏலம் விடப்படவுள்ளது. முதற்கட்டமாக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டப்படி, டெல்லி-குர்கான் பைலட் பாதையில், டெல்லி-ஹரியானா எல்லையிலிருந்து குர்கானில் உள்ள ராஜீவ் சௌக் வரை பாட் டாக்ஸியை நிறுவ முடிவுசெய்யப்பட்டுள்ளது. 12.3 கி.மீ. தூரத்திற்குப் போடப்படும் இந்த முதல் பாதை, அரசு, தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து செயல்படுத்தும் திட்டமாக இருக்கும்.
பாட் டாக்ஸி (Pod Taxi) என்றால் என்ன? எப்படிச் செயல்படுகிறது?
தனிப்பட்ட விரைவான போக்குவரத்து (Personal rapid transit) என்று அழைக்கப்படும் இது, போக்குவரத்து நெரிசலுள்ள இடங்களில், எந்தப் பிரச்னையும் இல்லாமல் மக்களைக் கொண்டுசெல்ல பயன்படுத்தப்படுகிறது. உயரத்தில் ட்ராக் போடப்பட்டு அண்டையில், தொங்கியவாறு ‘pod’கள் அதிவேகமாகச் செல்லும். நம் மெட்ரோ ரயில் போலவே செயல்படும் இதன் மிகப்பெரிய பலம், இது ஒரு தானியங்கி. தூரத்தில் இருந்துகொண்டே இதன் செயல்பாடுகள் முழுவதையும் கட்டுப்படுத்த முடியும். இதன் ‘pod’ ஒன்றில் ஆறு பேர் வரை பயணம் செய்யலாம். எதிர்காலத்திற்கான போக்குவரத்துத் திட்டமாக கருதப்படும் இதன் மூலம், காற்று மாசடைவதை வெகுவாக குறைக்க முடியும். சூரிய சக்தியிலும் இதை இயக்கலாம் என்பதால் எரிபொருள் பிரச்னையும் ஏற்படாது.
இந்திய அரசு அறிவித்துள்ள பாட் டாக்ஸி திட்டம் குறித்து சில முக்கியத் தகவல்கள்
ஐந்து பேர் செல்லக்கூடிய வகையில் நிறுவப்படும் இந்த ‘pod’கள் முழுக்க முழுக்க தானியங்கி. இவை நிலத்திலிருந்து 5 முதல் 10 மீட்டர் உயரத்தில், மேலே இருக்கும் ட்ராக்கில் தொங்கும் வகையிலோ, அல்லது இதற்காக அமைக்கப்பட்ட தளத்தில் ஓடும் வகையிலோ அமைக்கப்பட்டிருக்கும்.
தானியங்கி என்றாலும், வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலம் கட்டுப்பாட்டுத் தளத்திலிருந்தும், ஆங்காங்கே நிறுத்தங்களில் இருந்தும் கண்காணிக்கப்படும்.
வானிலை மாற்றங்கள் ஏற்பட்டாலும், இதை முழுக்கட்டுப்பாட்டில் எப்போதும் வைத்திருக்க முடியும். கீழே சாலையில் நெரிசல் என்றாலும், மேலே எந்தத் தடையுமின்றி இதில் பயணம் செய்யலாம்.
சூரியச் சக்தி பயன்படுத்தினாலும், இல்லாவிட்டாலும் இதற்காகும் எரிபொருள் செல்வது மிகவும் குறைவு தான். எனவே, இதன் கட்டணம், பெருநகரங்களில் தற்போதுள்ள மெட்ரோ ரயிலைவிடக் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
12.3 கீ.மீ. தூரத்தைக் கடக்க முதலில் டெல்லியில் நிறுவப்படும் இது, விரைவில் மற்ற இந்திய நகரங்களுக்கும் வந்துவிடும்.
பாட் டாக்ஸி
ஒரு மைல்கல் திட்டமாக கருதப்பட்ட இது, இன்றுவரை கிடப்பில் போடப்பட்டதற்கான காரணம், அரசின் கொள்கை கமிஷனான NITI Aayog சிவப்பு கொடி காட்டியதுதான். இந்தத் தொழில்நுட்பம் குறித்த அச்சம், பாதுகாப்பானதாக இருக்குமா என்ற கவலை, நிறுவப்படுவதற்காகும் அதீத பொருட்செலவு, இதையெல்லாம் யோசித்துவிட்டு, முதலில் 1 கி.மீ., கட்டமைத்து அதைச் செயல்படுத்தி காட்டவேண்டும் என்றெல்லாம் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை, Automated People Mover (APM) வழிமுறைப்படி, அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் சிவில் இன்ஜினியர்ஸ் (ASCE) வகுக்க, இந்தியாவின் இந்த முதல் தனிப்பட்ட விரைவான போக்குவரத்து (PRT) திட்டம் உயிர்பெறவிருக்கிறது. வாகன வருகை குறித்த ஆடியோ மற்றும் வீடியோ காட்சி எச்சரிக்கை அமைப்பு, ட்ராக்கில் இருந்து பாட் விலகினால் எச்சரிக்கை மணி, கண்காணிப்பு கேமராக்கள், ஆடியோ தொடர்பு, அவசர அழைப்பு வழிமுறைகள் மற்றும் தீ பாதுகாப்பு, உள்ளிட்ட மேம்பட்ட வசதிகள் இதில் முக்கியமானவை.
“Automated People Mover (APM) வழிமுறைப்படி வடிவமைப்பு, கட்டுமானம், செயல்பாடு மற்றும் பராமரிப்பு போன்ற விஷயங்களுக்கு அதிகம் செலவு ஏற்படுத்தாத, ஆனால் அதே சமயம் பாதுகாப்பான முறையில், இந்தத் தனிப்பட்ட விரைவான போக்குவரத்து (PRT) திட்டம் நிறைவேற்றப்படும்” என்று இந்தத் திட்டத்தை தற்போது தூசி தட்டிய உயர்மட்டக் குழு தெரிவித்துள்ளது. அதன்படி, இதை வழிநடத்தப் போக்குவரத்து நிபுணர் எஸ்.கே.திராமதிகாரி தலைமையில் ஐந்து நபர்கள் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
“தடைகள் நீங்கிவிட்டதால், கூடிய விரைவில் இந்தத் திட்டத்திற்கான ஏலம் விடும் பணிகள் தொடங்கப்படும். உயர்மட்டக் குழுவின் உத்தரவுப்படி, பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்படும். போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கவும், போக்குவரத்துத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தவும் இந்தத் திட்டம் கைகொடுக்கும்” என்று திரு.திராமதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாட் டாக்ஸி
சில கேள்விகள்
“2022-ம் ஆண்டு சுதந்திர தினத்தின்போது இந்தியாவின் முதல் புல்லட் ரயில் மும்பையிலிருந்து அகமதாபாத் நோக்கி பயணம் செய்யும்” என்று இதே மத்திய அரசு இதற்கு முன்னர் அறிவித்தது. 508 கி.மீ. தூரத்தை மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் கடந்து செல்லவிருக்கிறது புல்லட் ரயில். இந்தத் திட்டத்திற்கான மொத்த செலவு 1.1 லட்சம் கோடிகள். அப்போது இது அத்தியாவசிய திட்டம் தானா என்ற கேள்வியை எதிர்க்கட்சியான காங்கிரஸ் வைத்தது. “நீங்கள் செய்ய முயன்று தோல்வியடைந்த திட்டத்தைத்தான் நான் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப் போகிறேன். இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் எல்லோரும் மாட்டு வண்டியில் செல்லுங்கள்” என்று விதண்டாவாதத்துடன் மோடி பதிலளித்தார். நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளின் நிலையென்ன, உத்தரப்பிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் மக்களைக் காக்கவேண்டிய மருத்துவத் துறையே முதலில் ஆரோக்கியமான நிலையில் இருக்கிறதா என்பது போன்ற கேள்விகளை முன்வைத்து, தற்போது இந்தத் திட்டத்திற்கும் எதிர்ப்பலைகள் வரலாம். அப்போது பிரதமர் மோடி அனைவரையும் வேண்டாமென்றால் சைக்கிளில் போக சொல்வாரோ என்னமோ?
எது எப்படியோ, ஒரு துறையின் வளர்ச்சியைப் பார்த்துவிட்டு, வளராத துறைக்கு நீங்கள் ஏன் மதிப்பளிக்கவில்லை என்று கேட்பது நியாயமில்லை என்றாலும், தர்க்கங்கள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு இரண்டு கேள்விகளை மட்டும் ஆளும் அரசு தனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.
புல்லட் ரயில் அறிவித்திருக்கிறோம். பல முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயிலே இன்னமும் முழுமையாக இயக்கப்படுவதில்லை. இந்த நிலையில், தற்போது 4000 கோடி செலவில், இந்த நவீன போக்குவரத்துத் திட்டம் தேவையா?