கடந்த மாதம், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா மீது, புதிய தடைகளை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் விதித்து உள்ளது.
கிழக்காசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா, அண்டை நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையில், அவ்வப்போது ஏவுகணை, அணு ஆயுத சோதனைகளில், அந்நாடு ஈடுபட்டு வருகிறது.
நவ., 29ல், உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்யும் வகையில், கண்டம் விட்டு கண்டம் பாயும், அதிநவீன ஏவுகணை சோதனையில், வடகொரியா ஈடுபட்டது.
இந்நிலையில், வட கொரியாவுக்கு எதிராக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், புதிதாக பல தடைகளை விதித்துள்ளது. இதற்கான தீர்மானத்தில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள, 15 உறுப்பு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.இதுகுறித்து, ஐ.நா., பொதுச்சபைக்கான அமெரிக்க துாதர், நிக்கி ஹாலே, வாஷிங்டனில் நேற்றுகூறியதாவது:
கடந்த மாதம், 29ம் தேதி, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில், வட கொரியா ஈடுபட்டது.தங்கள் நாட்டு மக்கள் வறுமையில் வாடும்போது, ஆயுத பலத்தை அதிகரிக்கும் நோக்கில், வடகொரியா அரசு, இத்தகைய மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. வட கொரியாவின் செயல், எந்த வகையிலும் ஏற்க முடியாதது.இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.நா., சபைக்கான பிரிட்டன் துாதர், மேத்யூ ரைக்ராப்ட் கூறியதாவது:
இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய பொருட்களை, அணு ஆயுத ஏவுகணை தயாரிப்புகளுக்கு, சட்டவிரோதமாக வட கொரியா பயன்படுத்தி வருகிறது.
பெட்ரோலிய பொருள் ஏற்றுமதியை தடுப்பதன் மூலம், பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பதில் இருந்து, வட கொரியாவை தடுக்க முடியும். அதன்படி, அந்நாட்டுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.