‘மும்பை தொடர் தாக்குதல் சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி, ஹபீஸ் சயீத் தலைமையிலான அமைப்பை, அரசியல் கட்சியாக பதிவு செய்ய அனுமதிக்கக் கூடாது’ என, பாக்., நீதிமன்றத்தில், அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மும்பை தாக்குதல்
மஹாராஷ்டிர தலைநகர், மும்பையில், 2008 நவம்பரில் நடந்த, தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில், ஏராளமானோர் உயிரிழந்தனர்.இந்த தாக்குதல்களின் பின்னணியில், பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜமாத் – உத் – தவா பயங்கரவாத அமைப்பின் தலைவன், ஹபீஸ் சயீத் மூளையாக செயல்பட்டான். வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹபீஸ், நவ., 24ல் விடுவிக்கப்பட்டான்.
பாகிஸ்தானில், பார்லி., தேர்தல், 2018ல் நடக்க உள்ளது. இத்தேர்தலில், ஹபீஸ் சயீதின், ஜமாத் – உத் – தவா அமைப்பு, எம்.எம்.எல்., எனப்படும், மில்லி முஸ்லிம் லீக் என்ற பெயரில், அரசியல் கட்சியாக களமிறங்க திட்டமிட்டு உள்ளது.
பயங்கரவாதம்
ஆனால், மில்லி முஸ்லிம் லீக்கை, அரசியல் கட்சியாக அங்கீகரிக்க, பாக்., தேர்தல் கமிஷன் மறுத்து விட்டது. இதை எதிர்த்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில், ஹபீஸ் சயீத் சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்த வழக்கு விசாரணை, நேற்று நடந்த போது, பாக்., உள்துறை அமைச்சகம், நீதிமன்றத்தில் எழுத்து மூலம் கடிதம் சமர்ப்பித்தது. அதில், மில்லி முஸ்லிம் லீக்கை, அரசியல் கட்சியாக பதிவு செய்ய, கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மில்லி முஸ்லிம் லீக்கை, அரசியல் கட்சியாக பதிவு செய்தால், அரசியலில், பயங்கரவாதம், தீவிரவாதம் அதிகரிக்கும் என, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.