சோபன்பாபுதான் தனது தந்தை என்று அம்ருதா உரிமை கோராதது ஏன் என்று ஹைகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. ஜெயலலிதாவுக்கு பிறந்த குழந்தை தான்தான் எனக்கூறி பெங்களூரை சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதா அண்மையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஜெயலலிதாவின் உடலை தோன்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அவரது மனுவை நிராகரித்த சுப்ரீம்கோர்ட் மாநில உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அம்ருதாவுக்கு அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அம்ருதா மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த வழக்கில் அம்ருதாவிற்கு அப்பா யார் என்று உரிமை கோராதது ஏன் என்று ஹைகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு பிறந்த மகள் தான்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஜெயலலிதா உடலை தோண்டியெடுத்து டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு நேற்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் ஜெயலலிதாவின் மகள் என அம்ருதா உரிமைகோரும் வழக்கில் ஏன் டிஎன்ஏ சோதனை நடத்தக்கூடாது என கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது உரிமைகோராமல் மறைந்த பிறகு ஏன் உரிமை கோருகிறீர்கள் என்றும் மனுதாரரிடம் நீதிபதி வைத்தியநாதன் கேள்வி எழுப்பினார். டிஎன்ஏ சோதனை கேட்காத போது எப்படி உத்தரவிட முடியும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இன்றும் இந்த வழக்கு ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, ஹைகோர்ட் நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதாவை தனது தாய் என்று உரிமை கோரும் அம்ருதா, தனது தந்தை என்று சோபன்பாபுவை உரிமை கோராதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதாவின் ரத்த மாதிரி அப்பல்லோவில் உள்ளதா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். வழக்கில் இணைக்குமாறு ஆறுகோடி பேரும் வந்தால் என்ன செய்வது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் வாரிசு என்று உரிமை கோரும் அம்ருதா சென்னை ஹைகோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஜோசப் என்பவர் தன்னை இந்த வழக்கில் இணைத்துக்கொள்ளுமாறு மனு கொடுத்துள்ளார். அதற்கு நீதிபதி 6 கோடி பேரும் இணைக்க கேட்டால் விசாரணையை மெரீனா கடற்கரையில் வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டார் நீதிபதி.
டிஎன்ஏ சோதனைக்கு அனுமதித்தால் தமிழகத்தின் அமைதியை பாதிக்கக்கூடாது என்றும் நீதிபதி கூறினார். இதைத்தொடர்ந்து டிஎன்ஏ சோதனை, உடல் ஒப்படைப்பு தொடர்பாக இன்று புதிய மனு ஒன்றை அம்ருதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.