ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் ஆஜராகுமாறு சசிகலாவுக்கு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் சம்மன் அளித்துள்ளது.
ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவர், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில், அவருடைய மரணம் நிகழ்ந்தது. அவரது மரணத்துக்குப் பின் அ.தி.மு.க-வில் குழப்பங்கள் ஏற்பட்டன. கட்சி பிரிந்தது. கூடவே, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சந்தேகங்கள் எழுந்தன. ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் என்ன நிகழ்ந்தது என்பது பற்றித் தெரிந்துகொள்ள, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் வலுத்தன. இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், தனிநபர் விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்தது. ஆறுமுகசாமி, விசாரணையைத் தொடங்கி நடத்திவருகிறார். அதன்படி, சிலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுவருகிறது.
இந்த வகையில் தற்போது சசிகலா ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, அவர் மகள் ப்ரீத்தா ரெட்டி ஆகியோருக்கு 15 நாள்களில் பதிலளிக்குமாறு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.