ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் பழச்சாறு அருந்து வீடியோவை டிடிவி. தினகரனிடம் விவேன் தான் கொடுத்தார் என்று சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியா கூறியுள்ளார். நாங்கள் வீடியோவை கொடுத்தேனே தவிர, நான் கொடுத்தேன் என்று சொல்லவில்லை என்று டிடிவி. தினகரனுக்கு கிருஷ்ணப்ரியா பதிலடி தந்துள்ளார்.
கடந்த 20ம் தேதி டிடிவி. தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதாவின் வீடியோ உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 73 நாட்களில் மருத்துவமனையில் என்ன நடந்தது, ஜெயலலிதா எந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார் என்று தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில் வெற்றிவேல் வெளியிட்ட முதல் வீடியோ காட்சியில் ஜெயலலிதா பழச்சாறு அருந்திக்கொண்டு டிவி பார்ப்பது போல இருந்தது. ஆனால் இந்த வீடியோவில் இருப்பது ஜெயலலிதா தானா, அவரே வீடியோ எடுக்கச் சொல்லி இருந்தால் ஆடை விலகி இருந்ததையும், தன்னுடைய கால்கள் வெளியில் தெரிவதையும் அவர் அனுமதித்திருப்பாரா என்று பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
ஆர்கே நகர் தேர்தலுக்கு முந்தைய தினம் வெளியான இந்த வீடியோ மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியானது குறித்து கருத்து தெரிவித்த சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியா, ஜெயலலிதாவின் வீடியோவை வெளியிட்டது மிகுந்த மனவேதனையை அளித்துள்ளதாகவும், சசிகலாவிற்கு தெரியாமல் இந்த வீடியோ வெளியிடப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
மேலும் இந்த வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலை தினகரன் இனியும் தனக்கு அருகில் வைத்திருக்கக் கூடாது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிருஷ்ணப்ரியா வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு பேசிய தினகரன், வெற்றிவேல் தெரியாமல் வீடியோவை வெளியிட்டு விட்டார், அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்று கூறினார். மேலும் தான் அந்த வீடியோவை கிருஷ்ணப்ரியாவிடம் இருந்து வாங்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
தினகரனின் இந்த விளக்கத்திற்கு கிருஷ்ணப்ரியா பதிலடி தந்துள்ளார். ஜெயலலிதா வீடியோவை நாங்கள் கொடுத்தோம் என்று சொன்னேனே தவிர நான் கொடுத்தேன் என்று எப்போதும் சொல்லவில்லை. அந்த வீடியோவை சசிகலா சொன்னதன் பேரில் ஒரு பிரதி எடுத்து விவேக் தான் தினகரனிடம் கொடுத்தார் என்றும் கிருஷ்ணப்ரியா கூறியுள்ளார்.
ஆனால் எதற்காக கிருஷ்ணப்ரியா இந்த விளக்கத்தை அளித்துள்ளார் என்பது தான் சந்தேகமாக உள்ளது. தினகரனை ஓரம் கட்டிவிட்டு விவேக்கும், கிருஷ்ணப்ரியாவும் கட்சியில் கோளோச்ச நினைப்பதன் வெளிப்பாடா இந்த ஜெயலலிதா வீடியோ வெளியீடு விவகாரம் என்ற எண்ணமும் எழுகிறது. சசிகலாவிற்குப் பிறகு விவேக்கும், தானும் தான் எல்லாம் தினகரன் சும்மா என்பதை சொல்லாமல் சொல்ல நினைக்கிறாரோ கிருஷ்ணப்ரியா.