காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க அங்கம் வகித்தபோது, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தார் . அப்போது, மொபைல் போன் சேவைகளுக்கான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக, மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டினால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது. இதுகுறித்து சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி-யுமான கனிமொழி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2ஜி வழக்கு தொடர்பான வாதங்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து ஆ.ராசா- கனிமொழி உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த தீர்ப்பு தொடர்பாக டெல்லியில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
நேர்மையான அதிகாரிகளை குறிவைத்து வழக்கில் இருந்து விலக்கினர். 2ஜி முறைகேடு வழக்கில் நேர்மையாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் முறையாக வாதாடவில்லை. 2 ஜி வழக்கு தீர்ப்பை எதிர்த்து மேல்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். 2ஜி முறைகேடு வழக்கில் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பிரதமர் பாடம் கற்றுகொள்வார் என நினைக்கிறேன். இந்த தீர்ப்பு பின்னடைவு அல்ல. இப்போது ஊழலுக்கு எதிராக போராட வேண்டும். ஊழலுக்கு எதிராக போராடுவதில் சட்ட அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை.
முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹ்த்கி இந்த தீர்ப்பை வரவேற்று உள்ளார். சில குற்றஞ்சாட்டப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக அட்டர்னி ஜெனரல் ரோஹ்த்கி வாதாடினார். அவர் நியமனத்தின் போது எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.
இந்த வழக்கின் தீர்ப்பில் நீதிபதி முதலில் இருந்த உற்சாகம் படிப்படியாக குறைந்தது பின்னர் அது மிகவும் மோசமடைந்தது என கூறி உள்ளார்.