ஆப்பிள் ஐ போனுக்கு ஆசைப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் பெண் ஒருவரிடம் நூதன முறையில் ரூ.27.50 லட்சத்தை மோசடி செய்திருக்கிறது டெல்லியைச் சேர்ந்த ஒரு கும்பல். இதுதொடர்பான புகாரின் பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம் வி.பி.நகரை சேர்ந்தவர் சுகன்யா. எம்.பி.ஏ.முதுகலைப் பட்டதாரியான இவரது செல்போனில் அமெரிக்காவில் உள்ள லாட்டரி நிறுவனத்தில் 6.50 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசு விழுந்திருப்பதாக டெல்லியைச் சேர்ந்த சோனியா போயல் என்பவரும், தீபக் என்பவரும் பேசியுள்ளனர். மேலும், பரிசு தொகையினை பெற முன்பணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி மூலம் செலுத்தினால், உடனடியாக விலை மதிப்புமிக்க செல்போன் ஒன்றும் அதனைத் தொடர்ந்து பரிசுத் தொகையான ரூ.6.50 லட்சம் அமெரிக்க டாலர்கள் அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதை நம்பிய சுகன்யா அவர்கள் கூறியபடி முன்பணத்தினை செலுத்தியுள்ளார். இதையடுத்து சுகன்யாவுக்கு அவர்கள் ஆப்பிள் நிறுவன செல்போன் ஒன்றை அனுப்பியுள்ளனர். இதனால் சுகன்யாவிற்கு நம்பிக்கை ஏற்படவே கடந்த 25.10.2016 முதல் 3.6.2017 வரை பரமக்குடி ஸ்டேட் வங்கியின் மூலம் 17 தவணைகளாக மொத்தம் ரூ.27,59,235 பணத்தை அவர்களுக்கு அனுப்பியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட டெல்லியைச் சேர்ந்த அவர்கள் இருவரையும், அதன்பிறகு சுகன்யாவால் தொடர்புகொள்ள முடியவில்லை. அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார். இது தொடர்பாக, தனது சகோதரி சுகன்யாவிடம் ரூ.27.50 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்து விட்டதாக அஜித்(20) என்பவர் மாவட்டக் குற்றப்பிரிவுக் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் போலீஸார் டெல்லியைச் சேர்ந்த சோனியா போயல் மற்றும் தீபக் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.