டாய்லெட் ஏக் பிரேம் கதா எனும் சமூக நோக்கமுள்ள கதையை தொடர்ந்து அக்ஷ்ய் குமார், நடித்துள்ள மற்றொரு சமூகம் கலந்த வாழ்க்கை படம் பேடுமேன். பெண்களுக்கான நாப்கினை குறைந்த விலையில் தயாரிக்கும் எந்திரத்தை கண்டுபிடித்து சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த முருகானந்தம் அருணாச்சலத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. அக்ஷ்ய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே முதன்மை ரோலில் நடிக்க, பால்கி இயக்கி உள்ளார். அக்ஷ்ய் குமாரின் மனைவி டிவிங்கிள் கண்ணா தயாரித்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய அக்ஷ்ய் குமார், டாய்லெட் படம் ரிலீஸானபோது, இப்படத்தை தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பினோம். அரசும் இப்படத்தை பெண் டிரைவ் மூலமாக கொண்டு சென்று பல கிராமத்து ஊர்களில் ஒளிப்பரப்பி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். பேடுமேன் படத்தையும் அதேப்போன்று மக்களிடம் கொண்டு செல்ல எண்ணியுள்ளோம். எங்களின் நோக்கம் பணம் சம்பாதிப்பது அல்ல, மக்களை சென்று அடைய வேண்டும். இதற்கு அரசும் உதவ வேண்டும் என்றார்.
பேடுமேன் படம் அடுத்தமாதம் ஜன., 26-ம் தேதி ரிலீஸாகிறது.