வர்ணனையின்போது சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வார்த்தைகளைப் பிய்த்துப் பிய்த்துத்தான் பேசுவார். ஆனால், அவர்… சமீரா பந்தில் தோனி இறங்கி வந்து மிட் விக்கெட் திசையில் பவுண்டரிக்கு விரட்டியபோது Nice Strikes in the leg side… என படபடவென பேசினார், ஹர்ஷா போக்ளே போல! ஷாட் அப்படி… வேகம் அப்படி. பொதுவாக, ஓர் அழகிய டிரைவை இரு ஃபீல்டர்கள் விரட்ட, பந்து அவர்களுக்கு முன்னதாக பவுண்டரி லைனைத் தொடுவது அழகு. அதைவிட பேட்டில் பட்ட மறு நொடியில் பந்து பவுண்டரியைக் கடப்பது பேரழகு. எல்லோராலும் இப்படி பவர்ஃபுல் ஷாட் அடித்துவிட முடியாது. யுவியின் டீப் மிட் விக்கெட் திசை பவுண்டரிகளில் இதைக் காணலாம். தென்னாப்ரிக்க முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித்துக்கு இந்தவகையான ஷாட்கள் தண்ணி பட்ட பாடு. அதைவிட…
நேற்று, பீரதீப் பந்தில் தோனி அடித்த பந்தை டீப் கவர் திசையில் நின்றிருந்த ஃபீல்டர் விழுந்து பிடிக்க முயல்வார். பந்து அவர் கைகளில் பட்டு, பின் உடம்பில் பட்டு கீழே விழும். அந்த வேகத்தைக் கவனித்தீர்களா? எதிரொலிக்கும்போதே இவ்வளவு வேகம் எனில், உருண்டு வரும்போது…? ஆம், நேற்றைய ஆட்டத்தில் பழைய தோனியைப் பார்க்க முடிந்தது. திசரா பெரேரா ஃபுல்டாஸாக வீசிய கடைசிப் பந்தில் டீப் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸர் பறக்கவிட்டபோது, தோனி முற்றிலும் பழைய தோனியாக மாறியிருந்தார். இந்த தோனியைக் காணத்தான் ரசிகர்கள் ஏங்கிக்கிடக்கிறார்கள். நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் இப்படி ஆடாததால்தான், அகார்கர், லட்சுமண் என ஆளாளுக்கு ‘முடிவுரை’ எழுதினார்கள். அதே லட்சுமண் நேற்று வேற மாதிரி பேசினார். நரம்பில்லா நாக்கு எப்படியும் சுழலும்!
அதைவிடுங்கள்… ‘இனிமேல்தான் நீங்கள் தோனியின் விஸ்வரூபத்தைப் பார்க்கப் போகிறீர்கள்’ என ரவி சாஸ்திரி சொன்னது இதைத்தானோ! ஆரம்பத்தில் பந்துகளைத் தின்று, கடைசி ஓவரில் சிக்ஸர்கள் அடித்து, அல்லது அடிக்க முயன்று அவுட்டாகிப் போவதற்கு தோனி முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் போல தெரிகிறது. டி-20-யில் இனி இப்படி ஆடினால் மட்டுமே அணியில் இடம் சாத்தியம். தோனியின் நேற்றைய இன்னிங்ஸுக்கு அவரை நான்காவது இடத்தில் இறக்கிவிட்டதும் ஒரு காரணம். ரோகித் ஷர்மாவின் இந்த முயற்சியை விராட் கோலியும் பின்பற்றலாம்.
கட்டாக்கில் நேற்று நடந்த இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி, ஒரு வகையில் இளம் வீரர்களுக்காகவே நேர்ந்துவிடப்பட்டது. அதை கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர் நன்றாகவே புரிந்திருந்தனர். குறிப்பாக, ராகுல். அவர் ஆஃப் சைடில் கில்லி. அவரது டிரைவ், கட் அவ்வளவு கச்சிதம். ஆனால், நேற்று அவர் லெக் சைடில் அடித்த ஷாட்கள்தான் கவனம் ஈர்த்தது. திசாரா பெரேரா பந்தில் அடித்த புல் ஷாட், மேத்யூஸ் பந்தில் ஒரு காலை மட்டும் வலுவாக ஊன்றி திரும்பி நின்று (நடராஜர் ஷாட்) டீப் ஸ்கொயர் லெக் திசையில் பறக்கவிட்ட சிக்ஸர், பிரதீப் பந்தில் அடித்த அந்த ஃப்ளிக் பவுண்டரி என எல்லாமே பக்கா. தன்னை நிரூபிக்க வேண்டிய நேரத்திலும் கொஞ்சமும் பதற்றப்படாமல் ஆடியது சூப்பர். எதிர் திசையில் இருந்த ஷ்ரேயாஸ் பயமறியா காளை. அவர் அடித்தது 24 ரன்களே என்றாலும் ஆட்டத்தில் மெச்சூரிட்டி. இருந்தாலும் ஷாட் செலக்ஷனில் கொஞ்சம் கவனம் வேண்டும் ஷ்ரேயாஸ்!
இன்று விட்டுவிட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது என்பது போல ஆடினார் மணீஷ் பாண்டே. எதிர்முனையில் தோனி வெளுத்துக் கொண்டிருந்ததால், மணீஷ் மீது நெருக்கடியில்லை. அதனால்தான், சமீராவின் ஃபுல் லென்ந்த் டெலிவரியை அநாயசமாக சிக்ஸர் அடிக்கமுடிந்தது; பிரதீப் ஃபுல்டாஸாக வீசியதை நேக்காக தேர்ட் மேன் ஏரியாவில் சிக்ஸராக்க முடிந்தது. தோனியுடன் சேர்ந்து கடைசி 4 ஓவர்களில் 61 ரன்கள் சேர்க்க முடிந்தது. தென்னாப்பிரிக்கப் பயணத்துக்கு முன், மணீஷிடம் இருந்து இப்படியொரு ஆட்டம் வந்தது சந்தோஷம்!
என்னதான் பேட்டிங்கில் வெளுத்து வாங்கினாலும், ரிஸ்ட் ஸ்பின்னர்களான யூஸ்வேந்திர சாஹல், குல்தீப் இருவரும்தான் ஹீரோ. அதிலும் சாஹல்… சான்ஸே இல்லை. ஆஜானபாகுவான உடல்வாகு இல்லை. பந்தில் வேரியேஸன்கள் இல்லை. ஆனாலும், ஆட்டத்துக்கு ஆட்டம் விக்கெட் அள்ளிக்கொண்டே இருக்கிறார். அவரது பெளலிங் தியரி சிம்ப்பிள். ஸ்டம்புக்கு வெளியே ஸ்பின் செய்து, பேட்ஸ்மேனை பெரிய ஷாட் அடிக்கத் தூண்டுவது அல்லது இறங்கி அடிக்க வைப்பது. சிக்ஸரே போனாலும் கவலையில்லை. ஆஸ்திரேலியா இங்கு வந்திருந்தபோது, மேக்ஸ்வெல்லை இப்படித்தான் பலமுறை காலி செய்தார். இலங்கையிடமும் அப்படித்தான். தரங்கா அந்தப் பந்தைத் தொடாமல் இருந்திருந்தால் அது வைடு. அது பரவாயில்லை, திசாரா பெரேரா அவுட்டானது வைட் பால். மேத்யூஸ் விக்கெட்டுக்கும் பெரிதாக மெனக்கிடவில்லை. கடைசியில் 23 ரன்களில் 4 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகனாகி விட்டார்.
23 மாத இடைவெளிக்குப் பின் இந்திய அணியின் ஜெர்ஸி அணிந்த ஜெய்தேவ் உனத்கட் தன் பங்குக்கு ஒரு விக்கெட் எடுத்துவிட்டார். இளம் வீரர்கள் எல்லோரும் தங்களுக்கான டெஸ்ட்டில் பாஸ் செய்துவிட்டனர். தோனி டி-20-யில் எப்படி ஆட வேண்டுமோ அப்படி ஆடத் தொடங்கி விட்டார். இந்தியா 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்தூரில் நாளை நடக்கவுள்ள இரண்டாவது டி-20 போட்டியில் வென்று தொடரிலும் முன்னிலை வகிக்கும்பட்சத்தில், கடைசிப் போட்டியில் இதுவரை களமிறங்காத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம்.