இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடந்த முதல் டி20 போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, தோனியின் பேட்டிங்ஙை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
தோனியின் பேட்டிங் குறித்து ரோகித், `தோனி, ஒரு கிளாஸான விளையாட்டு வீரர். அவர் முதல் டி20 போட்டியில் நான்காவதாக களமிறங்கியது எங்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துவிட்டது. தோனி, அணிக்காக பல போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் நிறைய போட்டிகளில் கடைசி வரை களத்தில் நின்று, அணிக்காக வென்று கொடுத்திருக்கிறார். அவர் பேட்டிங் வரிசையில் நான்காவதாக களமிறங்கினால் மிகச் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறோம். இனி, அந்த இடத்தில் அவரை இறக்கிவிடுவதில் அதிக கவனம் எடுத்துக் கொள்வோம். பல ஆண்டுகளாக அவர் பேட்டிங் இறங்கும்போது அதிக அழுத்தம் இருக்கும். இனி, அவரை கொஞ்சம் ஃப்ரீயாக ஆட வைக்க வேண்டும் என்று நினைக்கிறோம்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில், நான்காவதாக களம் கண்ட முன்னாள் கேப்டன் தோனி, 22 பந்துகளில் 39 ரன்கள் குவித்து, அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதையடுத்துதான், ரோகித் ஷர்மா, தோனியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் வேண்டும் என்று பேசியுள்ளார்.