மத்திய பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு டெல்லி செல்வதற்காக விமான நிலையம் வந்த முன்னாள் அமைச்சர் கமல்நாத்தை குறி வைத்து போலீஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த போலீஸ் கான்ஸ்டபிள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார், அவருக்கு மருத்துவ சிகிச்சை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிண்ட்வாரா மக்களவை தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கமல்நாத் சிண்ட்வாரா வந்திருந்தார். தன்னுடைய சொந்த தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று மாலை 4.30 மணியளவில் விமான நிலையம் வந்துள்ளார்.
தனியார் விமானத்தை பிடிப்பதற்காக அவசர அவசரமாக சென்று கொண்டிருந்த கமல்நாத்தை குறி வைத்து போலீஸ் கான்ஸ்டபிள் ரத்னேஷ் பவார் தன்னுடைய துப்பாக்கியை நீட்டியுள்ளார். கமல்நாத் உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நடந்த கான்ஸ்டபிளின் செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. எனினும் அசம்பாவிதங்ள் நடைபெறும் முன்னர் மற்ற காவலர்கள் இந்த சம்பவத்தை பார்த்து அவரை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் குறித்து சிண்ட்வாரா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நீரஜ் சோனி, கான்ஸ்டபிள் ரத்னேஷ் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவருக்கு மனநலப் பிரச்னை இருக்கிறதா என்று மருத்துவ பரிசோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆனால் தான் என்ன செய்கிறேன் என்பதை தெரிந்தே தான் செய்வதாக கான்ஸ்டபிள் கூறியுள்ளதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது வரை வழக்கு பதியவில்லை என்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கான்ஸ்டபிள் ரத்னேஷ் பவார் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய தந்தை இறந்ததால் அவருக்குப் பதிலாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கமல்நாத்திற்கு நடந்த சம்பவம் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் அருண் யாதவ் கமல்நாத்திடம் கேட்டறிந்துள்ளார். காங்கிரஸ் மூத்தத் தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருக்கும் அளவிற்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பது கவலையளிப்பதாகவும் இது குறித்து சரியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்றும் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மிஸ்ரா கூறியுள்ளார்.