இந்த நிமிடம் ஒவ்வொரு நாட்டிலும் சட்டவிரோதமாக நடைபெறும் மூன்று நடவடிக்கைகளில் ஒன்று, விலங்குகள் கடத்தல் தொடர்பானதாகவே இருக்கும். தும்மல் வந்தால் உடலின் உள்ள எல்லா உறுப்புகளும் ஒரு நொடி நின்றுவிடும் என்பார்கள்; விலங்குகள் கடத்தல் குறித்த செய்திகளை கேட்டால் தும்மலே நின்றுவிடும்! அந்தளவிற்கு சோகம் மிகுந்ததாக இருக்கின்றன இந்தக் கதைகள். இன்றைய கடத்தல் அத்தியாயம் காண்டாமிருகம் பற்றியது….
இணையதளத்தில் காண்டாமிருகம் தொடர்பான சில காணொளிகளைப் பார்க்க முடிந்தது. உயிருடன் இருக்கிற ஒரு காண்டாமிருகத்தின் கொம்பை கடத்தல்காரர்கள் வெட்டி எடுத்துவிடுகிறார்கள். கொம்பு வெட்டப்பட்ட காண்டாமிருகம், முகம் சிதிலமான நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட உணவைத் தேடிவருகிறது. கண் முன்னே உணவு இருப்பதை பார்க்கிற காண்டாமிருகத்தால் அதை உண்ண முடியாமல் காலை நொண்டியபடி கடந்துபோகிறது. நிச்சயம் அதன் வாழ்நாள் அடுத்த இரண்டொரு நாட்களில் முடிந்திருக்கும். இன்னொரு காணொளியில், பிறந்து ஒருமாதம் ஆன குட்டியுடன் இருக்கிற காண்டாமிருகம் ஒன்று வயல்வெளியின் ஓரத்தில் முகம் புதைந்துகிடக்கிறது. அதன் கொம்புகள் மூர்க்கத்தனமாக வெட்டப்பட்டிருக்கிறது. தன் குட்டிக்காக உயிருடன் இருக்கப் போராடுகிறது. ஆனால், அடுத்த பத்து நிமிடங்களில் இறந்து விடுகிறது. தாய் இறந்தது தெரியாமல் ஒரு மாத குட்டி காண்டாமிருகம் பால் குடிக்க முயன்றுக் கொண்டிருக்கிறது. இவை இரண்டும் சாதரணமாக காணக்கிடைப்பவை மட்டுமல்ல. சாதரணமாக இந்த பூமியில் நடந்துகொண்டிருப்பவை. காண்டாமிருகத்திற்கு எதிரான போரில் மனிதர்கள் ஓரளவிற்கு வெற்றி பெற்றுவிட்டார்கள். காரணம், உலகம் முழுக்கவே சொற்ப எண்ணிக்கையிலான காண்டாமிருகங்களே தற்போது உயிரோடு இருக்கின்றன. அதன் கொம்புக்காக ஆண்டுக்கு 7000 காண்டாமிருகங்கள் என்கிற அளவில் கடந்த இருபது ஆண்டுகளாக வேட்டையாடப்பட்டிருக்கின்றன.
ஏன் காண்டாமிருகத்தின் கொம்புகளுக்கு இவ்வளவு பெரிய மார்கெட்? கொம்புகளை வைத்து என்ன செய்கிறார்கள்? ஒரு கிலோ கொம்புக்கு சர்வதேச சந்தையில் ஏன் 3,00,000 டாலர்கள்? (சுமார் 2 கோடி ருபாய்) இவை எல்லாவற்றிற்கும் காரணமான ஒரு சிறுகுறிப்பில் இருந்து தொடங்குவோம். 1597-ம் ஆண்டு சீனாவில் லீஷிசென் என்கிற ஒருவர் எழுதிய மருத்துவ குறிப்பில் காண்டாமிருகத்தின் கொம்பில் இருக்கும் கெரட்டின் என்கிற வேதிப்பொருள் உடல் உபாதைகளுக்கு… அதாவது, இயல்பான தலைவலியில் இருந்து புற்றுநோய்வரை அனைத்திற்கும் சர்வரோக நிவாரணி என எழுதிவிட்டு இறந்து போகிறார். அங்கிருந்து தொடங்கியதுதான் காண்டாமிருகத்தின் அழிவும். சீனாவில் விலங்குகளின் உடலபொருட்களை மருந்தாகப் பயன்படுத்தும் முறை தொன்றுதொட்டே இருந்துவருகிறது. எறும்புதின்னியில் இருந்து பாம்பு, தேவாங்கு, உடும்பு என எல்லா வனவிலங்குகளின் அழிவிற்கும் காரணமாக, சீனா இருந்துவருகிறது.
காண்டாமிருகத்தின் கொம்பை பயன்படுத்தி சீனாவில் எல்லாவகையான நோய்களுக்கும் மருந்து தயாரிக்க ஆரம்பித்தார்கள். ஆனால், கொம்பின் மருத்துவகுணம் குறித்து அறிவியல்ரீதியாக இப்போதுவரை நிருபிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை; ஆனால், காண்டாமிருக கொம்பு சர்வரோக நிவாரணி என நம்ப ஆரம்பித்தார்கள். வியட்நாமிலும் சீனாவிலும் அரசின் அனுமதியுடனேயே கொம்புகள் பயன்படுத்தபட்டிருக்கின்றன. உலக நாடுகளின் நிர்பந்தம் காரணமாக 2009-ம் ஆண்டு காண்டாமிருகத்தின் கொம்பை இறக்குமதி செய்ய சீனா தடைவிதித்தது. தடை, அதை உடை என்பதுதான் கடத்தல்காரர்களின் தாரகமந்திரம். தடை செய்யப்பட்டதால் கொம்பிற்கான மதிப்பு மடமடவென உயர ஆரம்பிக்கிறது. ஒரு கிலோ கொம்பின் விலை ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் டாலர்களில் இருந்து மூன்று லட்சம் டாலர்கள்வரை நினைத்து பார்க்கமுடியாத விலைக்கு வருகிறது.
மற்ற கடத்தல்களோடு ஒப்பிடும்போது காண்டாமிருக கொம்பின் கடத்தலுக்கான விலை அதிகம் என்பதால் கடத்தல் தொழிலின் அத்தனை பேருடைய பார்வையும் காண்டாமிருகத்தின் மீது பதிந்தது. இந்தியா, நேபாளம், பூட்டான், கென்யா, தென் கொரியா, தென் அமெரிக்கா, சுமத்ரா தீவுகள் என எல்லா இடங்களிலும் காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படுகின்றன. தப்பிப்பிழைத்த காண்டாமிருகங்களை மனித மிருகங்கள் துரத்த ஆரம்பிக்கின்றன. துடிதுடிக்க வெட்டி எடுக்கப்படுகிற கொம்புகள் ஏஜெண்டுகள் வழியாக முக்கியபுள்ளிகளிடம் வந்து சேருகிறது. அரசு அதிகாரிகள் கவனிக்கிற விதத்தில் கவனிக்கப்படுகிறார்கள். அவர்களிடமிருக்கிற “சரக்கு” எந்த வில்லங்கமும் இல்லாமல் சேரவேண்டிய இடத்திற்கு சேர்ந்து விடுகிறது. எல்லா வகையான கடத்தலுக்கும் முக்கிய இடமாக தாய்லாந்து இருந்துவருகிறது. தாய்லாந்தில் இருந்து கடல்வழியாகவும் தரைவழியாகவும் வியட்நாம், சீனா என நாடுவிட்டு நாடு எளிதாகக் கடத்திவிடுகிறார்கள்.
பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை காண்டாமிருகங்களை வீழ்த்த குழிவெட்டியவர்கள் இப்போது வேறு தொழில்நுட்பத்திற்கு மாறிவிட்டார்கள். காண்டாமிருக வேட்டைக்கு ஹெலிகாப்டர்களையே பயன்படுத்துகிறார்கள்; அப்படியென்றால், கொம்புகளின் மதிப்பை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். வான்வழியாக பயணிக்கிற கடத்தல்காரர்கள் தென்படுகிற காண்டாமிருகத்திற்கு துப்பாக்கி மூலம் விஷ ஊசியை செலுத்துகிறார்கள். அப்படி செலுத்துகிற ஊசிகள் காண்டாமிருகத்தை செயலிழக்க வைக்கிறது. நேரம் பார்த்து அங்கு செல்கிற கடத்தல்காரர்கள் காரியத்தை கச்சிதமாக முடித்துவிட்டு கிளம்பிவிடுகிறார்கள். கொம்புகளை வெட்டுவதற்கு மின் ரம்பங்ளை பயன்படுத்துவதால் நேரமும் உழைப்பும் மிச்சமாகிறது. 2000 கிலோ எடைகொண்ட ஒரு உயிரினத்தை வெறும் 1400 கிராம் கொண்ட மனித மூளை என்னவெல்லாம் செய்கிறது பாருங்கள்!
காண்டாமிருகத்தின் அழிவைத் தடுக்கவேண்டுமானால் கடுமையான தண்டனைகள் நடைமுறைப்படுத்தவேண்டும் என பாதிக்கப்பட்ட நாடுகள் முயன்றன. தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோதமாக காண்டாமிருகங்களைக் கொன்று, அதன் கொம்புகளை வெட்டி விற்பனை செய்வது அதிகரித்துவருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு க்ரூகர் சரணாலயத்தில் மண்ட்லா சௌகே என்பவர் 3 காண்டாமிருகக் குட்டிகளை சுட்டுக்கொன்றதாக கைது செய்யப்பட்டார். இந்த குற்றத்துக்காக இதுவரை இல்லாத வகையில் மொத்தம் 77 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நெல்ஸ்ப்ரூயிட் நகர நீதிபதி ஷீலா மிசிபி தீர்ப்பளித்துள்ளார். “தண்டனைகள் கடுமையானால் குற்றம் குறையும் என்கிற விதி அமலுக்கு வந்தால் மீதமிருக்கும் காண்டாமிருகங்களை காப்பாற்றிவிடலாம்” என்றது அவரது தீர்ப்பு.
கடந்த 15 ஆண்டுகளாக வேட்டையாடப்படுவதால் அழிந்துவரும் விலங்கினங்கள் குறித்து ஆராய்ச்சி செய்துவரும் செஸ்டர் பல்கலைக்கழகம், ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு 6 மணிநேரத்துக்கும் ஒரு காண்டாமிருகம் அதன் கொம்புக்காக வேட்டையாடப்படுவதாக தெரிவித்துள்ளது. அழிவின் விளிம்பிலிருக்கும் இந்த வகை மிருகத்தைக் காக்கும் வகையில் ஸ்பை கேமராவை அதன் கொம்புக்குள் பொருத்த தென்ஆப்பிரிக்க அரசு முடிவு செய்துள்ளது. செயற்கைகோள் மூலம் இந்த உளவு கேமரா காண்டாமிருகத்தை கண்காணிக்கும். இந்த கருவிகள் எஞ்சியுள்ள காண்டாமிருகங்களுக்கு பொருத்தப்படும் என்று தென் ஆப்பிரிக்க அரசு 2015-ல் அறிவித்தது. இவற்றின் உதவியினால் வேட்டையாடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு கொள்ளையர்களைப் பிடிக்கமுடியும் என்று நம்பியது. ஆனால் கடத்தல்காரர்கள் கேமராவோடு கொம்பையும் கடத்திகொண்டு போன சம்பவங்களை பார்த்து மிரண்டு போனது அரசாங்கம்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் சன்டியாகோ மிருகக்காட்சி சாலையில் இருந்த ஆண் வெள்ளைக் காண்டாமிருகம் 2014-ம் ஆண்டு இறந்தது, அந்த இறப்பு அந்த இனத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகளை அப்போது எழுப்பியது. காரணம், இப்போது உலகில் ஆப்பிரிக்க வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள் மொத்தத்தில் ஐந்து மட்டுமே எஞ்சியிருந்தன. ஆங்கலீஃபூ எனும் பெயருடன் இருந்த அந்தக் ஆண் காண்டாமிருகத்துக்கு 44 வயது. முதுமையின் காரணமாக அது உயிரிழந்தது. அழிவில் விளிம்பில் இருக்கும் இந்த இனத்தின் எஞ்சியுள்ள ஐந்து மிருகங்களில் ஒன்று கலிஃபோர்னியாவிலும், மற்றொன்று செக் குடியரசின் மிருகக்காட்சி சாலையிலும் உள்ளன. இதர மூன்றும் கென்யாவின் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளன. ஆங்கலீஃபூவை அதே மிருகக்காட்சிசாலையில் அங்கிருந்த பெண் கண்டாமிருகமான நோலாவுடன் சேரவிட்டு இனப்பெருக்கம் செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.
மற்ற மூன்று காண்டாமிருகங்களும் கென்யாவில் உள்ள சரணாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவற்றில் இரண்டு பெண் காண்டமிருகமும் ஒரு ஆண் காண்டாமிருகமும் இருக்கின்றன. ஆண் காண்டாமிருகத்திற்கு சூடான் என பெயரிட்டு இருக்கிறார்கள். தற்போது, ஆப்பிரிக்க வடக்கு வெள்ளை இனத்தில் உலகில் இருக்கும் கடைசி ஆண் காண்டாமிருகம் சூடான். சூடானோடு பெண் காண்டாமிருகங்களை பயன்படுத்தி இயற்கையாக இனப்பெருக்கம் செய்ய சரணாலய அதிகாரிகள், ஊழியர்கள் பல வழிகளில் முயற்சி செய்திருகிறார்கள். எல்லா முயற்சியும் தோல்வியில் முடிய இப்போது செயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்ய முயன்று வருகிறார்கள். இனப்பெருக்கம் நடந்தால் இனம் செழிக்கும். இல்லையேல் வெள்ளை காண்டாமிருகத்தின் கடைசி மிருகம் சூடானாகவே இருக்கும். மிச்சமிருக்கும் உலகின் கடைசி காண்டாமிருகங்கள் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பில் இருக்கின்றன. சில நிமிட கண்ணயர்வில் அதையும் கடத்துவதற்கு நேரம் பார்த்து காத்திருக்கிறார்கள் கடத்தல்காரர்கள். ஏனெனில், காண்டாமிருகம் என்றால் காசு!