முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தில் இதுவரை தி.மு.க மருத்துவர் அணியின் நிர்வாகி டாக்டர் சரவணன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, தீபா கணவர் மாதவன் உள்ளிட்ட 27 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். 120-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். டாக்டர் சரவணனிடம் கடந்த நவம்பர் 22, 23-ம் தேதி விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 13-ம் தேதி தீபாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணைகளுக்கு இடையே அப்போலோ மருத்துவமனையின் துணைத் தலைவர் பிரீதா ரெட்டி ‘ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா அப்போலோவுக்குக் கொண்டு வரப்பட்டார்’ என்று கூறி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக்குறைவால் ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். “ஜெயலலிதாவுக்கு காய்ச்சல்தான். நன்றாகக் குணமடைந்து வருகிறார்” என்று அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் நேற்று டெல்லியில் செய்தியாளர்கள், அப்போலோ மருத்துவமனையின் துணைத் தலைவர் பிரீதா ரெட்டியிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பாகக் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த பிரீதா, “ஜெயலலிதா சுவாசிக்க இயலாத நிலையில்தான் அப்போலோவுக்கு கொண்டுவரப்பட்டார்” என்று குறிப்பிட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
இதேபோன்று இன்று சென்னையில் பேட்டியளித்த அப்போலோ மருத்துவமனைக் குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி, “ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மக்கள் அச்சப்படக் கூடாது என்பதால், அவர் ஆபத்தான நிலையில் உள்ளதை வெளியிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது” என்று கூறியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடந்துவரும் நிலையில் பிரதாப் ரெட்டியும் பிரீதா ரெட்டியும் இவ்வாறு கூறியிருப்பது ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்கங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.