நேற்று, இந்திய வீரர் ரோகித் சர்மா, அவரது மனைவி ரித்திகா ஜோடிக்கு 2ம் ஆண்டு திருமண நாள். மொகாலி போட்டியை ரித்திகா நேரில் கண்டு ரசித்தார். ரோகித் இரட்டை சதம் அடிப்பதற்கு முன் பதற்றத்துடன் இருந்த ரித்திகா, தனது கணவர் புதிய உலக சாதனை படைத்ததும் ஆனந்த கண்ணீருடன் உற்சாகமடைந்தார். மூன்றாவது முறையாக இரட்டை சதம், கேப்டனாக முதல் வெற்றி போன்றவை ரோகித்தின் திருமண நாள் பரிசாக அமைந்தது.
45
நேற்று, 12 சிக்சர் விளாசிய இந்தியாவின் ரோகித் சர்மா, இந்த ஆண்டு அதிக சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதுவரை இவர், 20 போட்டியில் 45 சிக்சர் அடித்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (30 சிக்சர், 27 போட்டி), இங்கிலாந்தின் இயான் மார்கன் (26 சிக்சர், 20 போட்டி) உள்ளனர்.
162
ஒருநாள் அரங்கில் அதிக சிக்சர் அடித்த வீரர்களுக்கான பட்டியலில் 9வது இடத்தை ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்குடன் பகிர்ந்து கொண்டார் ரோகித் சர்மா. இவர்கள் இருவரும் தலா 162 சிக்சர் அடித்துள்ளனர். முதலிடத்தில் பாகிஸ்தானின் அப்ரிதி (351 சிக்சர், 398 போட்டி) உள்ளார்.
இலங்கைக்கு எதிராக 208 ரன்கள் குவித்த ரோகித், தனது 16வது சதமடித்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிகமுறை சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில், சேவக்கை (15 சதம்) முந்தி 4வது இடம் பிடித்தார் ரோகித்.
பாராட்டு மழை
ஒருநாள் அரங்கில் மூன்றாவது இரட்டை சதம் அடித்த ரோகித் சர்மாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
‘டுவிட்டரில்’ குவிந்த வாழ்த்துக்கள் விவரம்:
* சச்சின்
ரோகித் பேட்டிங் செய்வதை, எப்போதும் ரசித்து பார்க்கலாம். சாதனை தொடரட்டும் நண்பா…
* சேவக்
‘வாவ் ரோகித் வாவ்’, 100ல் இருந்து 200 ரன்களை 35 பந்தில் எடுத்தது சூப்பர். உன்னால் மிகவும் பெருமைப்படுகிறோம்.
* மஞ்ச்ரேக்கர்
200 ரன்களை எட்ட, எவ்விதமான ‘ஸ்பெஷல்’ ‘ஷாட்டும்’ இவருக்கு தேவைப்படவில்லை. பாராட்டுக்கள் ரோகித்.
* கப்டில், நியூசி.,
என்ன ஒரு சிறப்பான இரட்டை சதம். சபாஷ் ரோகித்.
*சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ஐ.சி.சி.,)
ஒரு முறைக்கு மேல், எந்த ஒரு வீரரும் இரட்டை சதம் அடித்தது இல்லை. ரோகித் மூன்று முறை சாதித்து விட்டார். உண்மையில் இது நம்ப முடியாத ஆட்டம் தான்.
‘ஸ்பெஷல்’
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,‘‘ ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ரன்கள் எடுத்தது, தொடரை (3–2) வெல்ல உதவியது. காயத்தால் ஏற்பட்ட மூன்று மாத ஓய்வுக்குப் பின், இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் எடுத்தேன். மோசமான தோல்விக்குப் பின் வென்றாக வேண்டிய நிலையில், தற்போது இரட்டை சதம் அடித்தேன். இந்த மூன்றில் எது சிறந்தது என, கணிப்பது சிரமம் தான். மற்றபடி, இன்றைய தினம் ‘ஸ்பெஷலான’ நாளாக அமைந்து விட்டது. எனது இரண்டாவது திருமண தினத்தில், இது போன்ற பரிசைத் தான் அவர் விரும்பி இருப்பார்,’’ என்றார்.