இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருடத்தின் முதல் காலாண்டு பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சிறு வீழ்ச்சி காணப்பட்டது. இருந்த போதிலும், தற்சமயம் அதில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன்அமரதுங்க தெரிவித்துள்ளார்.
புத்தசாசனம், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகாரம், சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரம், டிஜிட்டல் உட்கட்டமைப்பு, தொலைத் தொடர்புகள், விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சித் துறை ஆகிய அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் மீதான குழுநிலை விவாதங்கள் நாடாளுமன்றில் இன்று நடைபெற்றது.
இதன்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர், கடந்த வருடம் 22 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர். வரலாற்றிலேயே மிகக் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் கடந்த வருடத்திலேயே இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை ஒரு சிறந்த இடமாக காண்பிப்பதற்கு பல்வேறு ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என ஜோன் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.