தாஜ்மஹாலை சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து பாதுகாக்க, தற்காலிக திட்டங்கள் போதாது; அடுத்த, 100 ஆண்டுகளுக்கான திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள ஆக்ராவில், உலக அதிசயங்களில் ஒன்றான, தாஜ்மஹால் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த கட்டடத்தை, சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
உ.பி.,யின், ஆக்ரா, பிரோசாபாத், மதுரா, ஹத்ராஸ், எட்டா மற்றும் ராஜஸ்தானின், பாரத்புர் மாவட்டங்கள் அடங்கிய, 10,400 சதுர கி.மீ., பரப்புள்ள, தாஜ் டிரபீஜியம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள, நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி, உச்ச நீதிமன்ற அமர்வு கூறியிருந்தது.
இந்நிலையில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, நேற்று ஓர் அறிக்கையை தாக்கல் செய்தார். அதை பரிசீலித்த, நீதிபதி, எம்.பி.லோகுர் தலைமையிலான அமர்வு கூறியதாவது:இது போன்ற இடைக்கால அறிக்கைகளை, நாங்கள் கேட்கவில்லை. தாஜ்மஹால் பகுதியில், நீண்ட கால அடிப்படையிலான பராமரிப்பு, மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம், அடுத்த, 100 ஆண்டுகளுக்கான திட்டம் தேவை. இந்த பிரச்னையில் தொடர்புடைய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியது.