அரசியல் கட்சித் தலைவர்கள் மணிசங்கர் ஐயர் மற்றும் திருமாவளவனைக் கண்டிக்கும் வகையில் நேற்று திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “இந்துக்களின் கோயில்களை இடிக்க வேண்டும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக்கூறி, தமிழகம் முழுவதும் அவரைக் கண்டித்து இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தொல்.திருமாவளவனை கண்டிக்கும் விதமாக, திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதேபோன்று, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர், பிரதமர் நரேந்திர மோடியை தரம் தாழ்ந்த வகையில் விமர்சித்ததைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ஆர்ப்பாட்டம் நிறைவடையும் தறுவாயில் அவர்கள் இருவரின் உருவபொம்மைகளையும் பா.ஜ.கவினர் எரிக்க முயற்சி செய்தனர். அச்சமயம் சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் அதை தடுத்து நிறுத்த முயன்றனர். இருப்பினும் ஒரு உருவபொம்மை மட்டும் தீப்பற்றி எரிந்தது. பின்னர் அதுதொடர்பாக பா.ஜ.கவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டார்கள். அதேபோன்று இந்து முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பினரும் தொல்.திருமாவளவனைக் கண்டித்து திருப்பூர் குமரன் சிலை அருகில் உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்று காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.