மதுரையில் நீண்ட காலத்துக்குப் பிறகு பொங்கி வரும் வைகை நதிக்கு பூஜை செய்யும் நிகழ்ச்சியை மதுரை மாநகர பா.ஜ.க.வினர் நடத்தினார்கள். கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் தென் மாவட்டங்களில் பெரும் வறட்சி ஏற்பட்டது. வைகை அணை நிரம்பததால் விவசாயத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகளும் மக்களும் மிகவும் கஷ்டப்பட்டனர். ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை நிலவியது. மதுரையில் பெரிய அளவில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் குடங்களுடன் அலைந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் முல்லைப்பெரியாறு, வைகை அணைப்பகுதிகளில் நல்ல மழை பொழிந்தது. அதனால் முதலில் மதுரை மாவட்ட விவசாயத்துக்கு மட்டும் கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணை நீர்மட்டம் உயர்ந்ததால் சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டத்துக்கும் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டதால், மதுரை மாநகருக்குள் நேற்று முதல் வைகை ஆறு பொங்கி வரத்தொடங்கியுள்ளது. இதை கொண்டாடும் வகையில் மதுரை மாநகர பா.ஜ.க.வினர், மாநில மகளிரணித்தலைவி மகாலெட்சுமி தலைமையில் சிம்மக்கல் அருகே வைகைக்கரையில் தீபம் ஏற்றி வைகை அன்னைக்கும், வருண பகவானுக்கும் நன்றி சொன்னார்கள். சிறப்பு பூஜைகள் செய்தார்கள். மூன்று ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் வைகையில் தண்ணீர் நிரம்பி செல்லுகிறது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.