வடக்கு, கிழக்கில் பௌத்த விகாரைகள் அமைப்பதற்கு தமிழர்களும், முஸ்லிம்களும் தடையாக உள்ளதாக இனவாத சக்திகள் பிரச்சாரம் மேற்கொள்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,
இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்பட வேண்டும் என்ற உண்மையான பரிசுத்தமான எண்ணங்கள் இருக்கின்ற பௌத்த தேரர்கள், பௌத்த மக்கள் இந்த நாட்டில் நிறையவே இருக்கின்றனர்.
இத்தகைய நிலையில்தான், சில தீய இனவாத சக்திகளால் குறுகிய சுயலாப நோக்குடைய அரசியல்வாதிகளால் தூண்டப்படுகின்ற சில கைக்கூலிகள் பௌத்த மக்கள் இல்லாத வடக்கு, கிழக்கு உட்பட்ட பகுதிகளில் இரவோடிரவாக புத்த பெருமானின் சிலைகளைக் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்று விடுகின்றன.
இது புத்த பெருமானையும், பௌத்த மதத்தையும் அவமதிக்கும் செயலாகவே நான் காணுகின்றேன். குறித்த செயல்கள் தொடர்பில் விமர்சனங்கள் எழுகின்றபோது, இந்த பௌத்த நாட்டின் வடக்கு கிழக்கில் பௌத்த விகாரைகள் அமைப்பதற்கு தமிழர்கள், முஸ்லிம்கள் தடையாக உள்ளதாக அதே இனவாத சக்திகள் பிரச்சாரம் மேற்கொள்கின்றன.
இது தவறான விடயம். இத்தகைய குழப்பங்களை ஏற்படுத்துவதற்காகவே இந்த தீய சக்திகள் புத்த பெருமானின் சிலைகளைக் கொண்டு வந்து வைத்து விடுகின்றன என்பதுதான் உண்மையான விடயம் என தெரிவித்துள்ளார்.