அமெரிக்க- சிறிலங்கா இந்தோ பசுபிக் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், சிறிலங்காவுக்கு , அமெரிக்க கடலோரக் காவல்படையின் கப்பல் ஒன்று வழங்கப்படவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று இதனை அறிவித்துள்ளது.
கடந்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் தோமஸ் சானோன், சிறிலங்காவுக்கு இரண்டாவது கப்பலை அமெரிக்கா வழங்கவுள்ளதாக கூறியிருந்தார்.
இருநாடுகளுக்கும் இடையிலான வளர்ந்து வரும் ஒத்துழைப்பின் அடையாளமாகவும், பிராந்திய உறுதிப்பாட்டில் இருநாடுகளும் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையிலும், இந்தக் கப்பல் சிறிலங்காவுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
செக்ரட்டரி வகையை சேர்ந்த இந்தக் கப்பல் சிறிலங்காவின் கடல் எல்லை மற்றும் பொருளாதார வலயத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதறும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.