சிங்களவர்களுக்கு மாத்திரம் எனக்கு சேவை செய்ய முடியும். எனினும் எமது கண்டி தோட்டப்புற தமிழ் மக்களை பாதுகாக்க எவரும் இல்லை. அவர்களுக்கு நான் தான் தந்தையாகும். அதனால் நான் பல சேவைகளை செய்தேன். எனினும் நல்லாட்சியில் ஒன்றும் நடக்கவில்லை. நானே சேவை செய்தேன். எனினும் வாக்குகள் அன்னத்திற்கு வழங்கப்பட்டதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே சபையில் தமி ழில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமை ப்பு, தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழி, நல்லிணக்க மற்றும் ஒருமை ப்பாடு அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான விசேட தெரிவுக்குழுக்களின் அறிக்கை மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
புதிய கிராமம் என்ற பெயரில் அமைச்சு இருந்தாலும் மலையகத்தில் இன்னும் பழைய வீடுகளே உள்ளன. இன்னும் கூட பழைய முறைமையின் பிரகாரமே மலையகத்தின் மீதான பார்வை உள்ளது. நல்லாட்சியில் மலையக மக்களுக்கு எந்தவொரு பிரதிபலனும் கிடைக்கவில்லை.
கல்வி, மலசல கூட, சுகாதார, வீதி பிரச்சினைகள் உள்ளன. தோட்ட இளைஞர்களின் பெறுபேறுகள் மிகவும் மோசமாக உள்ளன. தோட்ட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருவதில்லை. அவர்களுக்கு வேலைவாய்ப்பும் இல்லை. தற்போது தோட்டப் புற இளைஞர், யுவதிகள் கொழும்பு விற்பனை நிலையங்களில் கூலிக்காரர்களாக வேலை பார்க்கின்றனர்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அப்பகுதி இளைஞர்களுக்கு எத்தனை தொழில்வாய்ப்புகள் வழங்கியுள்ளீர்கள்? அமைச்சர் திகாம்பரத்தை நான் பாராட்டுகின்றேன். வீடமைப்பு திட்டத்தை சீரான முறையில் முன்னெடுத்து வருகின்றார். எனினும் அடிப்படை பிரச்சினைகள் பல உள்ளன. எமது ஆட்சியின் போது முடியுமான அளவிற்கு நாம் சேவை செய்து விட்டோம். நாவலப்பிட்டியை பொறுத்தவரையில் நான் தலையிட்டு தமிழ் பாடசாலைகளுக்கு கட்டடங்களை வழங்கியுள்ளேன். எனினும் தற்போது அங்கு ஆசிரியர்கள் இல்லை. மாணவர்கள் வருவது இல்லை. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்கள பிரதேசங்களில் பொறியியலாளர்கள், வைத்தியர்கள் உருவாகின்றனர். எனினும் தோட்டப் பகுதிகளில் இவ்வாறு உருவாகுவதில்லை. கல்வி தொடர்பில் அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்கள் காலப்பகுதியில் வைத்தியசாலைகளை அரசுடைமையாக்கினோம். எனினும் நல்லாட்சியில் அந்த வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இல்லை. அந்த வைத்தியசாலைகள் மீண்டும் கம்பனிகளுக்கே வழங்கப்படுகின்றன. எனவே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் பாராளுமன்ற உறுப்பி னர்கள். எமக்கு நவலோக வைத்தியசாலைக்கு போக முடியும். எனினும் அப்பாவி தோட்ட மக்கள் நிலைமை மிகவும் மோசமாகும். நாவலப்பிட்டி வைத்தியசாலைகளை மூடினால் தலவாக்கலை வைத்தியசாலைக்கு போக வேண்டும்.
தேர்தலின் போது வராத அரசியல் தலைவர்கள் இல்லை. எனினும் தற்போது எவரும் வருவதில்லை. அமைச்சர் திகாம்பரம் நல்ல வீட்டு திட்டத்தை முன்னெடுத்துள்ளார். இதன்படி நாவலப்பிட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. என்றாலும் பத்து வீடுகளே வழங்கப்பட்டுள்ளன. தோட்ட மக்கள் லயன் அறைகளில் எவ்வளவு காலம் இருந்துள்ளனர்? 150 வருடங்கள் இருந்துள்ளனர். எல்லோருக்கும் வீடுகள் வழங்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் அன்னத்திற்கு வாக்களித்தனர். எனினும் நாமே அவர்களுக்கு சேவை செய்தோம். ஆனால் வாக்கு அன்னத்திற்காகும்.
அத்துடன் அமைச்சர் திகாம்பரம் காலத் தில் பெரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். கண்டிக்கு அதிகமான வீடுகளை வழங்குங்கள். அமைச்சர் பதுளையை விட நுவரெலியாவுக்கு அதிகமாக வழங்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு வாக்கு கிடைக்கும். தற்போது வீதிகள் தாரிடப்படுகின்றன. எனினும் ஒரு மாதத்தில் உடைந்து விடுகின்றன. ஆனால் எனது காலத்தில் காபட் இட்டேன். இன்னும் சேதமாகாமல் உள்ளது.
கல்வி அமைச்சர் 5000 தொழில்வாய்ப்புகளை வழங்கியுள்ளார். எனினும் தோட்டப்புற மக்களுக்கு எத்தனை கிடைத்தன? இராஜாங்க அமைச்சருக்கே இல்லை என்றால் தோட்ட மக்களுக்கு எப்படி கிடைக்கும்? அத்துடன் கண்டியில் 2 இலட்சம் தமிழர்கள் உள்ளனர். இதுவரை ஒன்றும் செய்யவி ல்லை.
தற்போது ஒரு கிலோ அரிசியின் விலை 100 ரூபா. தேங்காய் விலை 65 ரூபா. தோட்ட மக்கள் எப்படி வாழ்வது? தொண்டமான், திகாம்பரம் வந்தாலும் கண்டியில் நான்தான் தலைவன். எனக்கு சிங்களவர்களுக்கு மாத்திரம் சேவை செய்ய முடியும். எனினும் எமது தமிழ் மக்களை பாதுகாக்க எவரும் இல்லை.அவர்களுக்கு நான் தான் தந்தை. அதனால் நான் பல சேவைகளை செய்தேன். என்னுடன் வாருங்கள். அங்குள்ள குறைபாடுகளை காண்பிக்கின்றேன். சிறைச்சாலை அமை ச்சை பொறுத்தவரையில் இந்த அமைச் சுக்கு டி.எம்.சுவாமிநாதன் தகுதியற்றவர் எனினும் அவர் மிகவும் கெளரவமான நல்ல மனிதர். இந்நிலையில் அமைச்சர் சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள குறை பாடுகளை பார்க்க வேண்டும். சிறையில் இருந்து வெளியே வருபவர் நல்ல மன நிலையுடன் வர வேண்டும் என்றார்.