விசமிகள் சிலர் அண்மைக்காலமாக சுனாமி பீதியை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடுவதால் மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு பிரதான வீதிகளில் கூடும் நிலை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, மொரட்டுவைப் பகுதியில், நேற்று சுனாமி வதந்தி பரப்பப்பட்டதால், கரையோரங்களில் வாழ்ந்த மக்கள் நகர்புறங்களுக்குப் படையெடுத்துள்ளனர். இதனால், மொரட்டுவையில் நேற்று( 05) பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இவ்வாறான அனர்த்தம் ஏற்படவில்லை என்றும் சுனாமி வதந்தி பரப்புவர்களால் தாமும் அண்மைக்காலமாக பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சுனாமி வதந்தி பரப்பப்பட்டதால் மக்கள் பிரதான நகரங்களுக்கு அணிதிரண்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
குறிப்பாக திருகோணமலை பகுதியிலுள்ள கிணறுகளில் நீர் உள்வாங்கப்பட்டதால் மக்கள் சுனாமி அனர்த்தம் ஏற்படப்போவதாக நினைத்து, அச்சத்தில் கரையோர பகுதிகளிலிருந்து வெளியேறினர்.
முல்லைதீவு மாவட்டத்திலும் இவ்வாறு வதந்தி பரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமையும் மட்டக்களப்பில் கரைவலை தொழிலில் ஈடுபட்ட மீனவர்களின் வலையில் இலட்சக்கணக்கான கடல்பாம்புகள் சிக்கியுள்ளன.
கடந்த 2004ஆம் ஆண்டு, இலங்கையில் சுனாமி அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டதாகவும் எனவே, சுனாமி அனர்த்தம் ஏற்படுவதற்காகவே, தற்போது இவ்வாறான அறிகுறிகள் தென்படுவதாகவும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.