முல்லைத்தீவைச் சேர்ந்த 120 முஸ்லிம் குடும்பங்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு அடிக்கல் நடப்பட்டது. இந்த நிகழ்வு நேற்றுக்காலை முல்லைத்தீவு கிச்சிராபுரத்தில் இடம்பெற்றது.
இந்தத் திட்டத்தில் ஓரிரண்டு தமிழ்க் குடும்பங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன என அறிய முடிகின்றது.
வீட்டுத் திட்டத்துக்கான நிதியை ஐக்கிய அரபு ராச்சியத்தின் தனவந்தர் ஒருவர் வழங்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
உள்நாட்டுப் போர் காரணமாக கிச்சிராபுரத்தில் இருந்து இடம்பெயர்ந்து 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீள்குடியமர்ந்த 120 குடும்பங்களுக்கே இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளன.
வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.ஜெனோபரால், அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க அவரின் ஏற்பாட்டில் வீடுகள் அமைக்கப்படவுள்ளன என அறிய முடிகிறது.
இதில் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பிரத்தியேக செயலாளர் ரிப்கான் பதியூதீன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.ஜெனோபர் வீட்டு த்திட்டத்தைப் பெற்றுக்கொடுக்கும் இணைப்பாளர் முகமட் றவ் , அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எச்.முஜாகீர், அமைச்சர் ரிசாத் பதியூதீனின் தந்தை பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல்லை நட்டனர்.
எனினும் நிகழ்வு தொடர்பாக அரச அதிகாரிகளுக்கோ, மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர்களுக்கோ தெரியப்படுத்தப்படவில்லை.
அவர்கள் அழைக்கப்படவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. முழுக்க முழுக்க அமைச்சர் ரிசாத் சம்பந்தப்பட்டவர்களே நிகழ்வில் கலந்து கொண்டனர் எனவும் அறியமுடிகிறது.