“மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளை மதீப்பீடு செய்யாது பகல் கனவு காண்கின்றனர்” என்று மீன்பிடி மற்றும் கடற்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொது எதிரணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து போட்டியிடுவது குறித்து கடந்த 26ஆம், 28ஆம் திகதிகளில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுகள் இணக்கப்பாடின்றி முடிவடைந்திருந்தன.
2018ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தைத் தோற்கடிக்கவேண்டும், தேசிய அரசிலிருந்து வெளியேற வேண்டும், சு.கவின் தலைமைத்துவத்தை மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்க வேண்டும் என சில கோரிக்கைகளைப் பொது எதிரணியினர் இந்தப் பேச்சுகளின்போது முன்வைத்தனர். ஆனால், சு.க. இதற்குக் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், பொது எதிரிணியின் கோரிக்கைகள் மற்றும் மஹிந்தவின் நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிட்டுள்ள மகிந்த அமரவீர,
“சமகால சு.கவின் கொள்கைகளை மதிப்பிடாது பொது எதிரணியினர் செயற்பட்டு வருகின்றனர். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சு.க. தனித்துப் போட்டியிட்டுப் பாரிய வெற்றியைப் பெற்றுக்கொள்ளும். பொது எதிரணியுடனான பேச்சுகளின்போது தகுதிவாய்ந்தவர்கள் கலந்துகொள்ளவில்லை.
ஐ.தே.கவுடன் தேசிய அரசில் சு.க. இணைந்து செயற்பட்டாலும் தனித்துவமான கொள்கையும், வேலைத்திட்டமும் எமக்குள்ளது” – என்றார்.