வார்னேவால் முடியவில்லை…முரளிதரனால் முடியவில்லை…வாசிம் அக்ரம், மெக்ராத், டேல் ஸ்டெய்ன் எவராலும் முடியவில்லை. அதிவேகமாக 300 விக்கெட் எடுத்த பௌலர் என்ற டெனிஸ் லில்லியின் சாதனையை எவராலும் முறியடிக்க முடியவில்லை. 1981-ல் அரங்கேறிய அந்த சாதனையை சுழல் ஜாம்பவான்கள் என்று புகழப்பட்டவர்களாலும், வேகச் சூறாவளிகள் என்று வர்ணிக்கப்பட்டவர்களாலும் அசைக்க முடியவில்லை. கடந்த 24-ம் தேதி நாக்பூரில் அந்த 36 ஆண்டுகாலச் சாதனையை முறியடித்துவிட்டார் ரவிச்சந்திரன் அஷ்வின்.
54 போட்டிகளில் 300 விக்கெட்டுகள். அந்த மைல்கல்லை எட்டிவிட்டார். டெனிஸ் லில்லியை விட 2 போட்டிகள் குறைவாக. அஷ்வின் எப்படி சாதிக்கிறார்? அவர் விக்கெட்டுகளை அள்ளுவது எப்படி? இந்தியாவின் தலைசிறந்த ஸ்பின்னர் இவர்தானா? சர்வதேச அளவிலும் இவரை மிஞ்ச ஆளில்லையா? எல்லா கோணங்களிலிருந்தும் அலசுவோம்.
இந்திய டெஸ்ட் அணியில் அசைக்க முடியாத பெயர்களில் ஒன்று அஷ்வின். கடந்த 6 ஆண்டுகளில் 7 தொடர்நாயகன் விருதுகள். பல போட்டிகளில் மேட்ச் வின்னர். எப்போதுமே எதிரணிக்கு சிம்ம சொப்பனம். குறுகிய காலத்தில் அதிக தொடர்நாயகன் விருது வாங்கிய ஒரே இந்திய வீரர். ஹர்பஜன் சிங் என்ற ஜாம்பவானை வெயிட்டிங் லிஸ்டுக்கு அனுப்பியவர். ஜடேஜாவுடன் இணைந்து பௌலிங்கில் அசைக்க முடியாத பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளை இந்திய மண்ணில் அலறவிட்டவர். நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அஷ்வினுக்காக நேர்ந்து விடப்பட்ட அணிகள். 52 பந்துகளுக்கு ஒருமுறை அஷ்வின் 1 விக்கெட் வீழ்த்துகிறார். அதாவது ஒவ்வொரு 9 ஓவருக்கும் 1 விக்கெட்.
“சொடுக்கு பால் போட்டேனு வச்சுக்கயேன் அவன ஈஸியா அவுட்டாக்கிடலாம்” – சென்னை 28 படத்தில் ஜெய் குறிப்பிடும் அந்த சொடுக்கு பால் பற்றி கிரிக்கெட் விளையாடுபவர்களில் பலருக்கும் அர்த்தம் புரிந்திருக்காது. இன்று ‘கேரம் பால்’ என்று பிராண்ட் ஆகியிருப்பது அந்த ‘சொடுக்கு பால்’தான். 1940-களில் சிலர் அந்த வகையான பந்துகளை வீசியுள்ளனர். பின்னர் அஜந்தா மெண்டிஸ் அடிக்கடி அதைப் பயன்படுத்த ‘கேரம் பால்’ எனப் பெயர் பெற்றது. அதை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றவர் அஷ்வின்.
தன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதைப் பயன்படுத்தத் தொடங்கினார். மெண்டிஸ் பின்னாளில் காணாமல் போக, அஷ்வின் இன்று டாப் பௌலராக உருவெடுத்துள்ளார். ஏனெனில், அஷ்வின் அதை மட்டுமே பயன்படுத்தவில்லை. வழக்கமாக பந்து வீசிக்கொண்டிருப்பார், திடீரென கேரம் பால் வந்து விழும். அந்த சர்ப்ரைஸ் டெலிவரிகள்தான் அஷ்வினின் ட்ரம்ப் கார்டு. அதற்கு நடுவில் பல்வேறு வகையான யுக்திகளையும் கையாண்டார். ஆஃப்-ப்ரேக், ஆர்ம் பால், கேரம் பால், தூஸ்ரா என்று ஆஃப் ஸ்பின்னின் அனைத்து வெரைட்டிகளையும் கலந்து கட்டி அடிப்பவர், துல்லியமாக லெக்-ப்ரேக் போட்டு பேட்ஸ்மேன்களை அலறவிட்டுள்ளார். கூக்ளியும் அஷ்வினுக்கு அத்துப்படி.
பேட்ஸ்மேன்கள் அஷ்வினை எதிர்கொள்வதில் இதுதான் பிரச்னை. பந்து ஆஃப்-ஸ்பின் ஆகும் என்று தெரிந்து நின்றாலே, அது ஸ்பின் ஆகும் தன்மை முதல், பிட்ச் ஆகும் இடம் வரை அனைத்தையும் கணித்து ஆடவேண்டியிருக்கும். ஆனால், தன்னை நோக்கி வரும் பந்து எப்படிப்பட்டது என்று கொஞ்சமும் கணிக்க முடியாமல் இருக்கும்போது? எப்படிப்பட்ட பேட்ஸ்மேனும் திணறத்தானே செய்வான். அஷ்வினின் வெற்றிக்குக் காரணமே அவர் தன்வசம் கொண்டிருக்கும் இத்தனை ஆயுதங்கள்தான்.