அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது.
நியூசிலாந்தில், அடுத்த ஆண்டு (ஜன. 13 – பிப். 3) 19 வயதுக்குட்பட்டோருக்கான 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ‘நடப்பு சாம்பியன்’ வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன.
இத்தொடருக்கான சாம்பியன் கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது. வெலிங்டனில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில், நியூசிலாந்து விளையாட்டு துறை அமைச்சர் கிராண்ட் ராபர்ட்சன், ஐ.சி.சி., தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன், நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ஒயிட் மற்றும் இத்தொடரின் விளம்பர துாதரான, நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் ஆகியோர் இணைந்து கோப்பையை அறிமுகம் செய்தனர்.
இத்தொடரை பிரபலப்படுத்தும் நோக்கில், சாம்பியன் கோப்பை, இன்று முதல் நியூசிலாந்தில் உள்ள பிரபல பள்ளிகள் மற்றும் கிரிக்கெட் கிளப்புகளுக்கு சென்று வர உள்ளது.
இதுகுறித்து கோரி ஆண்டர்சன் கூறுகையில், ‘‘இத்தொடருக்கு விளம்பர துாதராக நியமிக்கப்பட்டதை மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். இரண்டு முறை (2008, 2010) 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் விளையாடிய அனுபவம் என்றும் மறக்க முடியாது. கோஹ்லி, ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன், ஜோ ரூட் போல, நானும் இத்தொடரில் விளையாடி இருப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இத்தொடர் மூலம் இளம் வீரர்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். இந்த அனுபவம், சீனியர் போட்டிக்கு கைகொடுக்கும்,’’ என்றார்.