அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின், ‘ஏர்போர்ஸ் ஒன்’ விமானத்தில், வெள்ளை மாளிகை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர், ராஜ் ஷா, பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். இவ்வாறு பேட்டி அளிக்கும் இந்தியாவை பூர்வீகமாக உடைய, முதல் அதிகாரி, ராஜ் ஷா. அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின் வெள்ளை மாளிகையில், செய்திப் பிரிவு சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. ஹோப் டிக் இயக்குனராக நியமிக்கப்பட்டார். அப்போது, இந்தியாவைப் பூர்வீகமாக உடைய, ராஜ் ஷா, 33, முதன்மை துணை செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். அமெரிக்காவில், இந்தியாவைப் பூர்வீகமாக உடையவர்களில், மிகவும் உயர்ப் பதவியில் இருப்பது இவர்தான்.
அதிபர் உள்நாட்டில் பயணம் மேற்கொள்ளும்போது, அவருடன் செய்திப் பிரிவு அதிகாரிகளும் செல்வர். உயர் பதவியில் உள்ளவர்கள், பத்திரிகையாளர்களுக்கு அரசின் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பேட்டி அளிப்பர். அதிபர், டொனால்டு டிரம்ப், சமீபத்தில் மிசோரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றபோது, அவரது ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில், முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் என்ற அடிப்படையில், ராஜ் ஷா பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பல்வேறு சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்ட கேள்விகளுக்கு, அவர் பதிலளித்தார்.