லோக்பால் நியமனம் மற்றும் விவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, டெல்லியில் அடுத்த ஆண்டு போராட்டம் நடத்தப்போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார் இதுகுறித்து அன்னா ஹசாரே கூறியதாவது: லோக்பால் நியமனம் கோரி, பல முறை பிரதமருக்கு கடிதம் எழுதியும் பலனில்லை. லோக்பால் அமைப்பதன் மூலம், ஊழலை தடுக்க முடியும்.
ஆனால், லோக்சபாவில், எதிர்க் கட்சி தலைவர் இல்லாததால், லோக்பால் நியமனத்தை செயல்படுத்த முடியாத நிலை உள்ளதாக, மத்திய அரசு கூறுகிறது. விவசாயிகள் தற்கொலைக்கு தீர்வு காண, எந்த அரசும் முன் வருவதில்லை.
22 ஆண்டுகளில், 12 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதாரத்தை காக்க, எவ்வித நடவடிக்கையும் எடுக்காததே, இந்த அவல நிலைக்கு காரணம்.
இதே காலத்தில், எத்தனை தொழில் அதிபர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்பதை நான் அறிய விரும்புகிறேன். லோக்பால் நியமனம், விவசாயிகள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கோரி, அடுத்த ஆண்டு, மார்ச், 23ல், டெல்லியில், சத்தியாகிரக போராட்டம் நடத்த உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது லோக்பால் வலியுறுத்தி டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தியவர் அன்னாஹசாரே.
அப்போது அவரது போராட்டத்தில் உறுதுணையாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் பின்னாளில் ஆம் ஆத்மி கட்சி தொடங்கி தற்போது டெல்லி முதல்வராக இருக்கிறார். அன்னா ஹசாரே போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்த மற்றொரு பிரமுகர் கிரண்பேடி, டெல்லி தேர்தலில் பாஜ முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு படுதோல்வி அடைந்தார்.
தற்போது அவர் புதுச்சேரி கவர்னராக இருப்பது குறிப்பிடத்தக்கது.