பேஸ்புக் சமூக வலைத்தளத்தினூடாக காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட பெண் ஒருவருக்கும் ஆண் ஒருவருக்கும் உலகத்தை விட்டு பிரிந்து செல்ல வேண்டிய துயரமிகு சம்பவங்கள் இரண்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரக்காபொல பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
பேஸ்புக் மூலம் அறிமுகமான தனது காதலியை பார்ப்பதற்காக பூகொடையிலிருந்கு கண்டிக்கு மோட்டார் சைக்கிலில் சென்று கொண்டிருந்த 30 வயதுடைய இளைஞன் வரக்காபொல மாஹேன பகுதியில் வைத்து பஸ் ஒன்றுடன் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் பூபொட மண்டாவல பிரதேசத்தில் வசித்து வரும் உதய கமல் மாலதெனிய என்ற இளைஞனாவார்.
குறித்த இளைஞன் கடந்த சில மாதங்களுக்கு முன் நாவலப்பிட்டி பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுடன் பேஸ்புக் மூலம் காதல் தொடர்பை வளர்த்துக் கொண்டுள்ளார்.
தனது பேஸ்புக் காதலியை சந்திப்பதற்காக கண்டி தலதா மாளிகைக்கு அருகில் வருமாறு கூறி காதலிக்கு நிறைய பரிசுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு செல்லும் போதே வரக்காபொல பகுதியில் வைத்து பஸ் ஒன்றுடன் மோதி உயிரிழந்துள்ளார்.
பேஸ்புக் காதலால் மற்றுமொரு சோக சம்பவமும் வரக்காபொலயில் அரங்கேறியுள்ளது.
பேஸ்புக் மூலம் அறிமுகமான காதலன் தன்னை ஏமாற்றி விட்டதால் விரக்தியடைந்த நிலையில் வரகாபொல தொலங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட குறித்த பெண் பேஸ்புக் மூலமாக இரண்டு வருடத்திற்கும் மேலாக நபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இரண்டு வருடத்தில் பேஸ்புக் காதலனை ஒரு தடைவ கூட நேரில் சந்தித்ததில்லை இதனால் விரக்தியடைந்த குறித்த பெண் 14 பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த இரு சம்பவங்கள் குறித்தும் வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.