‘சதுரங்க வேட்டை’ படத்தைப் பார்த்தவர்களால் ‘காந்தி பாபுவை’ மறக்க முடியாது. காந்தி பாபு கேரக்டரில் நடித்து எல்லோரது மனதிலும் நச்சென்று பதிந்தவர் நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியம். நிவின் பாலியின் ‘ரிச்சி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நட்டியிடம் பேசினோம்.
”நான் பிறந்தது பரமக்குடி, வளர்ந்தது காரைக்குடி. மூணாவது படிக்கும் போது படிப்புக்காகவே அப்பா சென்னை கூப்பிட்டு வந்துவிட்டார். அப்போதிலிருந்து இப்போ வரைக்கும் சென்னைவாசிதான். நடிகனாய் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே ஒளிப்பதிவாளராய்தான் என்னுடைய கெரியரை தொடங்கினேன்’’ என்று தன்னைப் பற்றிய அறிமுகத்துடன் பேச ஆரம்பிக்கிறார் நட்டி.
”சின்ன வயதில் எனக்குப் பிடித்த இரண்டு விஷயம் சினிமா, கிரிக்கெட். பிறகு என் கெரியரை சினிமாவாக அமைத்துக் கொண்டேன். பத்தாவது படிக்கும் போது என் கூட படித்த ஃப்ரெண்ட் ஒருத்தன் கிளாஸூக்கு கேமரா எல்லாம் கொண்டு வருவான். அந்த கேமராவை அவன் தொடவே விடமாட்டான். ரொம்ப அலட்டிக் கொள்வான். அதனால் கேமராமீது எனக்கு ஒரு ஆர்வம் வர ஆரம்பித்தது. அதில் என்ன இருக்குனு தெரிஞ்சிக்கணும்னு தோணுச்சு. அப்போதுதான் கேமரா பற்றி கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அப்போது வந்த தமிழ் சினிமாவில் பி.சி.ஶ்ரீராம், சந்தோஷ் சிவன் சார் எல்லோரும் வேறு மாதிரி சினிமாவைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். அதில் ஈர்க்கப்பட்டு ஒளிப்பதிவாளராக ஆகிவிட்டேன். முதலில் கேமரா மேன் ரங்கா சாரிடமும் அடுத்து விஜயலட்சுமி மேமிடமும் வேலை பார்த்தேன். அப்புறம் என் நண்பர்கள் பல பேர் சினிமாவில் இயக்குநராக இருந்தார்கள். அவர்கள் படத்திலும் கொஞ்சம் வேலை பார்த்தேன்.
என்னுடைய முதல் பட வாய்ப்பு இந்தியில்தான் அமைந்தது. அதுவும் அனுராக் காஷ்யப் படத்தில். ரொம்ப கிரியேட்டிவான டைரக்டர். அவருடைய எழுத்துகள் ரொம்ப பிரமாதமாக இருக்கும். வார்த்தை கோப்பதை அழகாகச் செய்வார். என்னுடைய ஃப்ரெண்ட் அனுராக் காஷ்யப்பை வாடா போடானுதான் பேசுவேன். இந்திப் படத்தில் அறிமுகமாவதற்கு முன்பாகவே விளம்பர படங்கள், வீடியோஸ் நிறையப் பண்ணிட்டு இருந்தேன். நான் பண்ணிய மியூசிக் ஆல்பம் எல்லாம் ஹிட் ஆச்சு. அந்த நேரத்தில் அனுராக் காஷ்யப், ராம்கோபால் வர்மாவின் ‘சத்யா’ படத்தில் ரைட்டராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அந்தப் படத்தின் வேலைகள் முடிந்தவுடன் அனுராக் தனியாக படம் இயக்கத் தொடங்கினார்.
அப்போது என் நண்பர் ஒருத்தர் அனுராக் காஷ்யபிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அனுராக் என் மியூசிக் ஆல்பம் பார்த்துவிட்டு இந்த மாதிரியான ஒரு கேமரா மேன் என் படத்துக்கு வேணும்னு கேட்டிருக்கார். அப்போது என் நண்பர் ” இந்த கேமரா மேன் வேணும்னா சொல்லுங்க, என் நண்பனை வரச் சொல்றேன்’னு சொல்லியிருக்கார். அப்போது நான் டெல்லியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். என் ஃப்ரெண்ட் போன் பண்ணினான். விஷயத்தை சொன்ன உடனே கிளம்பி மும்பை வந்து பார்த்தேன்.
அனுராக் காஷ்யப் ‘சத்யா’ மாதிரியான ஒரு படத்தை எழுதுறார். அதனால் வயசானாவரா இருப்பாருனு நான் நினைத்தேன். அவரும் என்னை ”இந்த மாதிரி ஒளிப்பதிவு செய்றாருனா, அனுபவம் மிக்க வயசான ஒருத்தராகத்தான் இருப்பார்”னு நினைத்திருக்கிறார். எங்க இரண்டு பேருக்கும் ஆச்சர்யம். முதல் சந்திப்பிலேயே கையில் சிகரெட்டை வைத்துக்கொண்டு பேசினோம். என்னைப் பார்த்து, ”ஆர் யூ நட்டி”னு கேட்டார். ‘ஐ எம் நட்டி. ஆர் யூ அனுராக் காஷ்யப்”னு கேட்க, அவர் ” ஐ எம் அனுராக்”னு சொல்ல அப்பவே இரண்டு பேரும் நல்ல க்ளோஸாக பேச ஆரம்பித்துவிட்டோம். அன்றையிலிருந்து இன்றைக்கு வரைக்கும் நல்ல ஃப்ரெண்ட்ஸாக இருக்கோம். அனுராக் காஷ்யப் முதல் படத்தில் நான் ஒளிப்பதிவாளர். அதன்பிறகு தொடர்ந்து மூன்று படங்களில் அவருடன் வேலை பார்த்தேன்.
அனுராக் காஷ்யப்பிற்கு தமிழ் சினிமா தாக்கத்தை நான்தான் உருவாக்கி வைத்தேன். ஏன்னா, தமிழ் சினிமாவைப் பாக்குற வாய்ப்பு அனுராக்கிற்கு அப்போது கிடைக்கவில்லை. ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘ஒளவையார்’, ‘புதிய பறவை’ பார்க்க சொல்லிக்கொடுத்தேன். ’’பழைய படமெல்லாம் பார். எப்படி வேலை பார்த்து இருக்காங்கனு பார்”னு சொல்வேன். அவன் அந்தப் படமெல்லாம் பார்த்துவிட்டு, ‘இது எல்லாம் எந்த வருஷம் படம்”னு கேட்பான். வருஷத்தை சொன்னால், ’வாய்ப்பே இல்லை சூப்பர்’னு சொல்வான். அப்படிதான் தமிழ் சினிமா அவனுக்கு அறிமுகம் ஆச்சு. அதற்குப் பிறகு தொடர்ந்து தமிழ் சினிமா பார்க்க ஆரம்பித்துவிட்டான். அவனுக்குத் தமிழில், ‘சுப்ரமணியபுரம்’, ‘பருத்திவீரன்” படம் எல்லாம் பிடிக்கும். என்னைவிட தமிழ் சினிமாவை இப்போது அவன் அதிகமாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டான். அனுராக் காஷ்யப்பிற்கு தமிழில் ரசிகர்களும் அதிகம்.