நாக்பூரில் டெஸ்டில், ‘பேட்டிங்’, ‘பவுலிங்கில்’ மிரட்டிய இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ‘சுழல்’ ஜாலம் காட்டிய அஷ்வின், டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 300 விக்கெட் வீழ்த்தி, சாதனை படைத்தார். இலங்கை அணி, தனது மோசமான தோல்வியை சந்தித்தது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் நாக்பூரில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 205, இந்தியா 610/6 (‘டிக்ளேர்’) ரன்கள் எடுத்தன. பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணி, மூன்றாம் நாள் முடிவில், ஒரு விக்கெட்டுக்கு 21 ரன்கள் எடுத்திருந்தது.
ஜடேஜா நம்பிக்கை:
நேற்று, நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. கருணாரத்னே (18), விக்கெட்டை கைப்பற்றிய ரவிந்திர ஜடேஜா, இலங்கை அணியின் சரிவுக்கு வித்திட்டார். பின், உமேஷ் யாதவ் ‘வேகத்தில்’ திரிமான்னே (23) வெளியேறினார். தொடர்ந்து அசத்திய ஜடேஜா, மாத்யூசை (10) ‘பெவிலியனுக்கு’ அனுப்பினார்.
அஷ்வின் அபாரம்:
அஷ்வின் வீசிய 32வது ஓவரில் ஷனாகா, 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். உடனடியாக எழுச்சி கண்ட அஷ்வின், ஷனாகா (17), தில்ருவான் பெரேரா (0), ஹெராத் (0) ஆகியோரை அவுட்டாக்கினார். விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் கேப்டன் சண்டிமால் மட்டும் தனிநபராக போராடினார். இஷாந்த் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய இவர், அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார். இவர், 61 ரன்கள் எடுத்திருந்த போது உமேஷ் பந்தில் அவுட்டானார். ‘சுழல் ஜாலம்’ காட்டிய அஷ்வின், கமகேவை போல்டாக்கி, டெஸ்ட் அரங்கில் தனது 300வது விக்கெட்டை பதிவு செய்தார்.
இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி, 166 ரன்னுக்கு சுருண்டு, இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. லக்மல் (31) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அஷ்வின் 4, இஷாந்த், உமேஷ், ஜடேஜா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இரட்டை சதமடித்த இந்திய அணி கேப்டன் கோஹ்லி, ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1–0 என முன்னிலை பெற்றது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி, டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் வரும் டிச. 2ல் துவங்குகிறது.