கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று தமிழர் தாயத்திலும் புலம்பெயர் சேதங்களிலும் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – கனகபுரத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் கிளிநொச்சி மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவினுடைய ஏற்பாட்டில் மாவீரர் நாள் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
இந்த நினைவு வணக்க நிகழ்வில் மாலை 6.05 மணிக்கு மணியொலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து பொது ஈகைச்சுடரினை மாவீரர் ஒருவரின் பெற்றோர் ஏற்றி வைக்க, தொடர்ந்து மாவீரர்களுக்கான நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டு துயிலும் இல்லப்பாடல் ஒலிக்கவிடப்பட்டு உயிரிழந்த உறவுகளுக்கு ஒரு சேர வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த துயிலுமில்ல வளாகத்தை இராணுவம் ஆக்கிரமித்ததன் பின்னர் அங்கிருந்த 3,195 கல்லறைகள் மற்றும் துயிலும் வளாகத்தை முற்றாக அழித்ததுடன் தொடர்ந்து இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
இதன் பின்னர் கடந்த ஆண்டு நவம்பமர் மாதம் 27ஆம் திகதி எட்டு வருடங்களுக்குப் பின்னர் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மக்கள் கூடி தங்கள் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு கிடைத்ததையடுத்து உயிரிழந்த மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தினர்.
இதேபோன்று இவ்வருடம் பல்வேறு தரப்புக்களின் ஆதரவுகள் அயராத உழைப்புக்களுக்குப் பின்னால் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் மாவீரருக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர்.இந்நிகழ்வில் மதத்தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகாண சபைஉறுப்பினர்கள், அரசியல்பிரதிநிதிகள் எனப்பலர் கலநது கொண்டு அஞ்சலிகளைச்செலுத்;தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.